இ.எம்.சுதர்சன நாச்சியப்பன்

 
தமிழகம்

‎முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் காலமானார்

இ.ஜெகநாதன்

சிவகங்கை: காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் காலமானார். அவருக்கு வயது 79. சில காலமாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், தனது இல்லத்தில் இன்று (செப்.17) காலை காலமானார்.

சிவகங்கை அருகே உள்ள ஏரியூரைச் சேர்ந்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன். ‎இவர் சிவகங்கை தொகுதியில் 1999 - 2004 காலக்கட்டத்தில் மக்களவை எம்.பி.யாக இருந்தார். கடந்த 2004 - 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

மேலும், இவர் 2013 - 14-ல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.

சட்டம் பயின்ற அவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். ‎மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

‎கடந்த 2000-ம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறைத் தலைவராகவும், 2002-ம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராகவும், 2003-ம் ஆண்டில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும், 2004-ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், இவர் இன்று காலமானார்.‎

மாணிக்கம் தாகூர் இரங்கல்:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், விருதுநகர் எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

தமது இளமை பருவத்தில் இந்திரா காந்தி தலைமையை ஏற்று இளைஞர் காங்கிரஸ் இணைந்து, காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டார். தொடக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும், பிறகு சிவகங்கை மக்களவை உறுப்பினராகவும், ஒன்றிய அரசின் அரசு நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர்.

2013 ஆண்டில் மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார் . பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க உரிமைக் குரல் எழுப்பியவர்.

காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஆலோசனைகளை வழங்கியவர். டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் திடீர் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் மறைவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெறும். இதில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பார்கள். நாளை (18.09.2026) சிவகங்கை மாவட்டம், ஏரியூரில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும்.” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT