சென்னை: வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது தடையற்ற மின் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.23-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலை நியாயமாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இரவு நேரங்களில் அரசியல் கட்சியினர் செயற்கையாக மின்தடையை ஏற்படுத்தி, வாக்குக்கு பணம் கொடுக்க முயற்சிப்பார்கள் என்பதால், அதை கவனமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் எந்த இடத்திலும் மின்தடை ஏற்படக் கூடாது என அனைத்து பிரிவு அலுவலர்களுக்கும் மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது தடையற்ற மின்சாரம் வழங்கவும் மின்வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே அனைத்து பகுதிகளிலும் பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. கோடையில் மின்சார பயன்பாடு, மின் பளு அதிகரிக்கும் என்பதால் பல இடங்களில் மின் கம்பிகள் மாற்றப்பட்டுள்ளன.
இதர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணிகள் அடுத்த சில நாட்களில் தொடங்கும்.
இதையடுத்து, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவின்போது மின்தடை ஏற்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாற்று வசதிகளும் தயார்நிலையில் வைக்கப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் ‘ஸ்ட்ராங் ரூம்’ மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதை தடுக்க, அலுவலர்கள் நள்ளிரவு வரை பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.