ரத்னவேல்பாண்டியன்
செங்குன்றம்: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ளஆட்டந்தாங்கல், பாலகணேசன் நகரைச் சேர்ந்தவர் ரத்னவேல் பாண்டியன் (40). எலக்ட்ரீ ஷியனான இவர் புழல், காவாங்கரைபகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகள்பூர்ணிமாவை (28) காதல்திருமணம் செய்து, காவாங்கரை பகுதியில் வசித்து வந்தார். இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பூர்ணிமாவை விட்டுப் பிரிந்த ரத்தினவேல் பாண்டியன், பூர்ணிமாவின் சகோதரர் சரவணனின் மனைவி சரண்யாவை 2-வது திருமணம் செய்து, ஆட்டந்தாங்கலில் வசித்து வந்தார்.
இந்நிலையில் ரத்னவேல் பாண்டியன் நேற்று காலை பைக்கில் செங்குன்றம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த மற்றொரு பைக் ரத்னவேல் பாண்டியன் மீது மோதியது. பின்னர் அதில் வந்த இருவர் ரத்னவேல் பாண்டியனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
படுகாயமடைந்த ரத்னவேல் பாண்டியனை பொதுமக்கள் மீட்டு, பாடிய நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் ரத்னவேல் பாண்டியன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
செங்குன்றம் போலீஸார் உடலைக் கைப்பற்றி சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, ரத்னவேல் பாண்டியனின் முதல் மனைவி பூர்ணிமாவின் சகோதரர்களான புழல், காவாங்கரையை சேர்ந்த சரவணன் (39), தனசேகர் (34), சித்தப்பாவான எண்ணூரை சேர்ந்த பழனிசாமி (45) ஆகிய 3 பேரை நேற்று மாலை கைது செய்தனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், “தங்கை பூர்ணிமாவின் வாழ்க்கையை கெடுத்தது மட்டுமல்லாமல், தன் மனைவி சரண்யாவை 2-வது திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தையும் சின்னாபின்னமாக்கிய ரத்னவேல் பாண்டியனை கொலை செய்ய சரவணன் திட்டம் தீட்டி, தம்பி தனசேகர், சித்தப்பா பழனிசாமியுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்” என்று போலீஸார் கூறினர்.