படம்: எல் சீனிவாசன்

தமிழகம்

கோட்டை நிலையத்தில் மின்சார ரயில் திடீரென தடம் புரண்டது - 2 மணி நேரம் சேவை பாதிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: செங்​கல்​பட்​டில் இருந்து சென்னை கடற்​கரை நோக்கிச் சென்ற மின்​சார ரயில், கோட்டை ரயில் நிலை​யத்​தில் திடீரென தடம் புரண்​டது. இதனால், செங்​கல்​பட்டு - சென்னை கடற்​கரை வழித்​தடத்​தில் இரண்டு மணி நேரத்​துக்கு மேலாக மின்சார ரயில் சேவை​கள் பாதிக்​கப்​பட்​டன. இதனால், பயணி​கள் கடும் அவதிப்​பட்​டனர்.

செங்​கல்​பட்டு ரயில் நிலை​யத்​தில் இருந்து நேற்று காலை ஒரு மின்​சார ரயில், பயணி​களு​டன் கடற்​கரை ரயில் நிலை​யம் நோக்கி சென்​றது. இந்த ரயில் நேற்று காலை 10:42 மணி அளவில், சென்னை கோட்டை ரயில் நிலை​யத்​தின் 1-வது நடைமேடை​யில் நுழைந்​த​போது, ரயி​லின் 7-வது பெட்​டி​யின் சக்​கரங்​கள் திடீரென தண்​ட​வாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்​டன. உடனே ரயிலில் இருந்த பயணி​கள் அலறியடித்து ஓட்​டம் பிடித்​த​தால், அங்கு பதற்​ற​மான சூழல் நில​வியது. அதிர்​ஷ்ட​வச​மாக இந்த விபத்​தில் பயணி​கள் யாருக்​கும் எந்​த​வித காய​மும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே ஊழியர்​கள் தடம் புரண்ட ரயில் பெட்​டியை மீண்​டும் தண்​ட​வாளத்​தில் நிலைநிறுத்​தும் பணி​களைத் தொடங்​கினர். இதற்​கிடை​யில், செங்​கல்​பட்​டு, தாம்​பரம் உள்​ளிட்ட பகு​தி​களில் இருந்து கடற்​கரை நோக்கி வந்த ரயில்​கள் ஆங்​காங்கே நிறுத்​தப்​பட்​டன. பயணிகளின் சிரமத்​தைக் குறைக்​கும் வித​மாக, தாம்​பரம், செங்கல்​பட்டு நோக்​கிச் சென்ற ரயில்​களின் புறப்​பாடு தற்காலிகமாக சென்னை பூங்கா ரயில் நிலை​யத்​துக்கு மாற்றப்பட்​டது. மேலும், சில சேவை​கள் சென்னை எழும்​பூர் வழியாக இயக்​கப்​பட்​டன.

அதே​நேரம், தடம் புரண்ட ரயிலை சீரமைப்​ப​தற்​காக, விபத்து நிவாரண ரயில் கோட்டை ரயில் நிலை​யத்​துக்கு விரைந்து வந்தது. ரயில்வே பொறி​யாளர்​கள், தொழில்​நுட்ப பணி​யாளர்​கள் மற்​றும் 100-க்​கும் மேற்​பட்ட ஊழியர்​கள் சீரமைப்பு பணி​களில் ஈடு​பட்​டனர். அதிநவீன தொழில்​நுட்ப மற்​றும் இயந்​திர​வியல் கருவி​களின் உதவி​யுடன் தடம் புரண்ட ரயில் பெட்​டி​யின் சக்கரங்களை மீண்​டும் தண்​ட​வாளத்​தில் நிலைநிறுத்​தும் பணிகள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

ஒரு புறம் தடம் புரண்ட ரயில் பெட்​டியை சீரமைக்​கும் பணி​கள் நடை​பெற்ற நிலை​யில், மறு​புறம் கோட்டை ரயில் நிலை​யத்​துக்கு சுமார் 200 மீட்​டர் முன்​பாக தண்​ட​வாளத்​தில் ஏற்​பட்ட பழுதை​யும் ரயில்வே ஊழியர்​கள் சரிசெய்​யும் பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் ஒன்​றரை மணி நேரம் போராடி, தடம் புரண்ட ரயி​லின் சக்கரங்கள் மீண்​டும் தண்​ட​வாளத்​தில் நிலைநிறுத்​தப்​பட்​டன.

தொடர்ந்​து, நண்​பகல் 12.57 மணிக்கு ரயில் பெட்​டிகள் அங்கிருந்து அகற்​றப்​பட்​டன. தொடர்ந்து தண்​ட​வாளத்தை சீரமைத்​து, இத்​தடத்​தில் ரயில் இயக்​கம் பிற்​பகல் 3.30 மணிக்கு பிறகு சீரானது. இந்த சம்​பவத்​தால், சுமார் 2 மணி நேரத்​துக்​கும் மேலாக செங்​கல்​பட்டு- தாம்​பரம்- சென்னை கடற்​கரை மார்க்கத்தில், மின்​சார ரயில் சேவை கடுமை​யாக பாதிக்கப்பட்டது. பயணி​கள் கடும் அவதிப்​பட்​டனர்.

SCROLL FOR NEXT