சென்னை: கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் நேற்றும் மின்சார ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. பயணிகள் 11-வது நாளாக கடும் அவதிப்பட்டனர். புதிய கால அட்டவணைப்படி, மின்சார ரயில் சேவை இயக்க பயணிகள் வலியுறுத்தினர்.
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால், 10, 11 ஆகிய நடைமேடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் பிப்.20-ம் தேதிமுதல் ஏப்.5-ம் தேதிவரை 89 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதர மின்சார ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.
கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் எழும்பூர் ரயில் நிலைய 5, 6-வது நடைமேடைகள் வழியாக இயக்கப்படுகின்றன. இவ்வாறு நடைமேடைகள் மாற்றப்பட்டதால், இருமார்க்கங்களிலும் மின்சார ரயில்கள் தாமதமாகின்றன.
ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பயணிகள் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை காத்திருக்கின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, பயணிகள் சிரமத்தைச் சந்திக்கின்றனர்.
அலுவலகத்துக்கு தாமதம்
பயணிகள் வசதிக்காக, இலவச சிறப்புப் பேருந்து சேவைகளும், விரைவு ரயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன. ஆனாலும், கடற்கரை - தாம்பரம் தடத்தில் ரயில் பயணிகள் நேற்று 11-வது நாளாக கடும் அவதியடைந்தனர்.
செங்கல்பட்டு, தாம்பரத்திலிருந்து எழும்பூர், பூங்கா நிலையத்துக்கு மின்சார ரயிலில் வர ஒன்றரை மணி நேரமானதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் நிலையங்களில் தலா 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டன. இதன் பிறகு, மெதுவாக ரயில்கள் சென்றன. அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகப் பயணிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ரயில் பயணிகள் கூறுகையில், “அட்டவணையில் அறிவித்த ரயில் களை முறையாக இயக்குவது இல்லை. அட்டவணையில் அறிவித்த பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் அறிவிப்பும் முறையாக இல்லை. எனவே பயணிகள் சிரமத்தைக் குறைக்க, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.