தமிழகத்தைப் போலவே புதுச்சேரியும் தேர்தல் திருவிழாவைச் சந்திக்க பரபரப்புடன் தயாராகி வருகிறது. சுமார் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட தமிழகத்திலேயே தேர்தல் ‘கவனிப்புகளை’ அரசும் கட்சிகளும் அசராமல் தொடங்கிவிட்ட நிலையில், முப்பது தொகுதிகளுக்கும் சேர்த்தே சுமார் 9 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட புதுச்சேரியில் ‘கவனிப்புகளுக்கு’ கேட்கவா வேண்டும்?
இந்தத் தேர்தலில் போட்டியிட்டு ‘எப்படியும்’ ஜெயித்தே ஆகவேண்டும் என கங்கணம் கட்டி களத்தில் இறங்கி இருக்கும் சிலர், மாதக் கணக்கில் மதிய விருந்தையும், மக்களை மகிழ்விக்கும் நல உதவிகளையும் அலுக்காமல் சலிக்காமல் அள்ளி வழங்கி வருகிறார்கள். அதேபோல், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி இந்தத் தேர்தலுக்கும் தொடருமா தொடராதா என்ற நிச்சயமற்ற நிலையிலும் அரசு இயந்திரம் மூலமாக தேர்தலுக்காக மக்களை ‘கவனிக்கும்’ மகத்தான வேலைகளை செய்யத் தொடங்கி இருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸிடம் தோற்றதில் இருந்தே விழித்துக் கொண்ட ஆளும் கூட்டணி, மக்களுக்கான அத்தியாவசிய திட்டங்களை செயல்படுத்துவதில் உடனடி கவனம் செலுத்தியது. அதன்படி ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. அவற்றின் மூலம் இப்போது அரிசி, கோதுமையை தொகுதி வாரியாக தரத் தொடங்கியுள்ளனர். பொங்கல் தொகுப்பு விநியோகத்தையும் தொடங்கி இருக்கிறார்கள். நலத்திட்ட உதவிகளை அளிப்பதிலும் கூடுதல் கவனத்தை செலுத்துகின்றனர்.
இதுபற்றி ஆளும் கூட்டணி தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “புதுவை அரசு சார்பில், சிவப்பு ரேஷன் அட்டையுள்ள ஏழைக் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாயானது தற்போது ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகையும் ரூ.500 உயர்த்தப்பட்டு உள்ளது.
இதைத் தாண்டி மின்துறையை தனியார் மயமாக்கும் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது, எங்களுக்கு அரசு ஊழியர்களின் ஆதரவை பெற்றுத் தரும். தமிழகம் போல் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத் தொகையும் தரப்போகிறோம். ஊக்கத்தொகை தரும் திட்டமும் உள்ளது” என்றனர்.
இதுபற்றி பேசும் இண்டியா கூட்டணிக் கட்சிகளோ, “இந்த அறிவிப்புகள் எல்லாமே மக்களை ஏமாற்றும் வேலை. அரசின் செயல்பாடின்மையை மக்களிடம் கொண்டு செல்வோம். போலி மருந்து விவகாரம், நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்காதது. மாநில அந்தஸ்து தராதது போன்றவற்றை மக்களிடம் சொல்வோம்” என்கின்றன.
இதற்கிடையில், பேரவைக்குச் செல்லும் பெருங்கனவில் இருக்கும் பலரும் தங்கள் தொகுதிகளில் வீடுதோறும் காலண்டர், இனிப்பு, வீட்டு உபயோகப் பொருள்களைத் தந்து ‘வேட்பாளர் அறிமுகம்’ செய்து கொண்டு வருகிறார்கள். முக்கியக் கட்சிகளில் விருப்ப மனுக்கள் வாங்கும் வைபவங்களும் களைகட்டுகின்றன. வாய்ப்புக் கிடைக்காமல் போனால் சமாளிக்க அடுத்த ‘பிளாட்பார்ம்’களையும் இப்போதே சிலர் தயார்படுத்தியும் வருகிறார்கள்.
கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது என்பார்களே... அதுபோல அளவில் சிறியதாக இருந்தாலும் தேர்தல் காலத்து ‘அமர்க்களங்கள்’ தமிழகத்தை விட புதுச்சேரியில் தடபுடலாகவே நடக்கின்றன.