தமிழகம்

மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தவெக எம்எல்ஏக்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்தத் தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட இருவரும் மீண்டும் இந்தத் தொகுதிகளின் எம்எல்ஏ-க்களாக வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி மதுராந்தகம் தொகுதி வாக்காளரான உஸ்.உமாபதி என்பவரும், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட கிருஷ்ணகாந்த் என்பவரும் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதேபோல் தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பானுமதி தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது, அனுமதிக்கப்பட்ட தொகையை விட இடைத்தேர்தலுக்கு கூடுதல் தொகையை செலவு செய்தது என பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதால் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும், எனக் கோரியுள்ளனர். இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT