வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் நடவடிக்கையாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் திருவள்ளூர்- திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமாபுரம் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.8 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ.1 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள் ஆகியவை இருந்தது தெரியவந்தது.
மேலும், அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தனியார் நகை கடையில் இருந்து திருப்பதியில் உள்ள கிளைக்கு நகை, வெள்ளிப் பொருட்களை கொண்டு செல்வதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்த நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை பாதுகாப்பாக கொண்டு சென்று திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் சு.ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் சு.ரவிச்சந்திரன் கருவூலத்தில் ஒப்படைத்தார். அப்போது அவர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.