புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் கேரளம், மேற்கு வங்கம், அசாம் மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச பேரவைத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் சென்று தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி முடித்துள்ளனர். இந்தச் சூழலில் இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணிக்கு பிறகு, இந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது கவனிக்கத்தக்கது. தலைநகர் டெல்லியில் இன்று மாலை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவிக்கின்றனர். இதில் தமிழகம், கேரளம், புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட வாய்ப்பு நிலவுகிறது.
இந்த அறிவிப்பு வெளியான பின்னர் தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். அதை பிரதிபலிக்கும் வகையில் புதுச்சேரியின் எல்லையோர பகுதிகள் மற்றும் சில முக்கிய சந்திப்புகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தயார் நிலையில் அரசியல் கட்சிகள்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளுக்கு ஏற்கெனவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியையும் திமுக ஏற்கெனவே தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தலை முன்னிட்டு திமுக பொதுக்கூட்டமும் நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது.
அதிமுக, பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணியும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கெனவே தொகுதி வாரியாக பேருந்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அதோடு தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றையும் அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு கூட்டணியும் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு பெற்றுள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. சீமானின் நாதகவும் தயாராக களத்தில் உள்ளது.