சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்று வரும் அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நாளை (ஏப்.21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கடந்த பிப்ரவரியில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடத்துவதால், நீண்ட நாட்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டியுள்ளது. அதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று ஏப்ரல் முதல் வாரத்துக்கு பதிலாக ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இத்தேர்தலில் தமிழகத்தில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் 1977-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் இருமுனை போட்டியே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.
வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 295 கம்பெனி துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அப்பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்கள் மற்றும் போலீஸார் என மொத்தம் 4.74 லட்சம் பேருக்கு 2 கட்டங்களாக தேர்தல் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு தபால் வாக்குகளும் வழங்கப்பட்டு, தொடர்புடைய தொகுதிகளில் செலுத்தி வருகின்றனர்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் பல்வேறு மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது மட்டுமின்றி, தேசிய கட்சியான பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்தும், ரோடு ஷோ மூலமாகவும் ஆதரவு கோரி வருகின்றனர். பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் மற்றும் வீடு தேடி வாக்கு சேகரிப்பு நடவடிக்கைகளையும் வேகப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதனால் அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில மற்றும் தேசிய அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து கட்சிகளிலும் சிறு, சிறு குழுக்களாக வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று தங்களது தேர்தல் வாக்குறுதிகளை விளக்கி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான இந்தத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவுக்கான பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அழியாத மை, எழுதுபொருட்கள், தேர்தல் தொடர்பான படிவங்கள் உள்ளிட்டவற்றை பலத்த பாதுகாப்புடன் அனுப்பும் பணிகள் 22-ம் தேதி காலை 11 மணி முதல் தொடங்கும். வாக்குப்பதிவு 23-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலை முழு அமைதியாக, நியாயமாக, வெளிப்படைத் தன்மையுடன் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
48 மணி நேரத்துக்கு பிரச்சாரம் செய்ய தடை: நாளை மாலை பிரச்சாரம் ஓய்ந்தது முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 23-ம் தேதி மாலை 6 மணி வரையிலான 48 மணி நேரத்தை அமைதி நேரமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் வேட்பாளர்கள், கட்சித்தொண்டர்கள் நேரடியாக மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்யவும், ஊர்வலமாக செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்.21, 22, 23 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் எளிதாக வந்து வாக்களிக்க, வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ம் தேதி, பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம், தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்த, தினக்கூலி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.