உத்திரமேரூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக வேட்பாளர் க.சுந்தர்.
உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. திமுக சார்பில் க.சுந்தர், பாமக சார்பில் பெ.மகேஷ் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் ‘மரம்’ மாசிலாமணி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முனிரத்தினம் மற்றும் சுயேச்சைகள் என 14 பேர் களத்தில் உள்ளனர்.
திமுக - சமூக நலத்திட்டங்கள் முதன்மை
திமுக சார்பில் போட்டியிடும் க.சுந்தர், ஏற்கெனவே 5 முறை வெற்றி பெற்றுள்ளார். தொகுதியில் ஒரு கிராமத்தில் இருக்கும் தொண்டரைக்கூட பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு மக்களிடம் நெருங்கிப் பழகும் தன்மை கொண்டவர்.
திமுக அரசின் சமூக நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று வாக்கு சேகரித்து வருகிறார். குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, உத்திரமேரூர் பகுதியில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளைச் சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேலும், உத்திரமேரூரில் புதிய பேருந்து நிலையம், நவீன விவசாயக் கிடங்குகள், கல்வி நிலையங்கள் அமைப்பதாக அவர் வாக்குறுதி அளித்து வருகிறார்.
கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாமக வேட்பாளர் பெ.மகேஷ் குமார்.
பாமக - குறைகளைச் சுட்டிக்காட்டி பிரச்சாரம்
அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் பெ.மகேஷ் குமார், கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் ஏற்கெனவே காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர். தனது பிரச்சாரத்தில், திமுக அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டி வாக்கு சேகரிக்கிறார். மேலும், மத்திய பாஜக அரசின் சாதனைகளைக் கூறியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நாதக - சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயம் முதன்மை
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரம் மாசிலாமணி, மண் வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை பிரச்சாரத்தின் மையப்பொருளாகக் கொண்டுள்ளார்.
நடந்தே சென்று மக்களைச் சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ‘மரம்’ மாசிலாமணி.
தற்சார்பு பொருளாதாரம், இயற்கை விவசாயம், இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி என உறுதி தந்து, நடந்தே மக்களை சந்தித்து வருகிறார்.
தவெக - மாற்று அரசியலை முன்னிறுத்தல்
தவெக சார்பில் களமிறங்கியுள்ள முனிரத்தினம், மாற்று அரசியலை முன்னிறுத்தியும் உள்ளூர் வேலைவாய்ப்புகளைப் பெருக்கப் பாடுபடுவேன் எனவும் உறுதி அளிக்கிறார். புதிய அரசியல் மாற்றத்துக்காகத் தமக்கு வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்.
உத்திரமேரூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட் டுள்ள தவெக வேட்பாளர் முனிரத்தினம்.
உத்திரமேரூர் தொகுதியில், தேர்தல் நாள் நெருங்க நெருங்க வேட்பாளர்களின் பிரச்சாரம் உக்கிரமடைந்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது.