தமிழகம்

“2026 தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்” - பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு

தமிழினி

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிற தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அதிமுகவின் அழுத்தம் காரணமாகவே ரூ.1000 மகளிர் உரிமை தொகையை வழங்குகின்றனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தீய சக்தியான திமுகவை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றவே எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அதிமுகவின் தாரக மந்திரம்.

நாட்டு மக்களைத்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்களது வாரிசாகப் பார்த்தனர். சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தருணத்தில் முதல்வர் நடந்துகொண்ட விதம் அனைவருக்கும் தெரியும்.

சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தில் என்னுடைய மேஜை மீது திமுகவினர் ஏறி நடனமாடினார்கள். அமைச்சர்களின் மேசை மீதும் நடனம் ஆடினார்கள். இப்படிப்பட்ட கொடுமையான நிகழ்வுகளை எல்லாம் ஏற்படுத்தியவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அதையெல்லாம் நாம் கடந்து தான் வெற்றி பெற்றிருக்கிறோம்.

அதை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் சட்டையை கிழித்துக் கொண்டு வீதியில் திரிந்தவர் தான் இன்றைய முதல்வர் ஸ்டாலின். அன்றைக்கு நீங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தான் வெளியே சென்றீர்கள்.

ஆனால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அப்போது என்ன ஆகப் போகிறீர்களோ? 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமையும். அதிமுக ஆட்சி குறித்து திமுகவால் விமர்சனம் செய்ய இயலவில்லை. எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஏதாவது குறை இருந்ததா?

சூழ்ச்சியால்தான் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.1991 தேர்தலில் திமுக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2006 தேர்தலில் மைனாரிட்டி அரசை நடத்திக்கொண்டிருந்தது திமுக. 2014 மக்களவைத் தேர்தலில் திமுகவால் ஓரிடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை.

முதல்வர் ஸ்டாலின் மின் கட்டணம், வீட்டு வரி, கடை வரி என அனைத்தையும் உயர்த்தியிருக்கிறார். வரி மேல் வரி போட்டு, மக்களை வாட்டி வதைக்கிறார். அதிமுக பொற்கால ஆட்சியை கொடுத்தது. அதே ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வர நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. மேலே இருக்கிற சக்கரம் கீழே வரும். இது தெரியாமல் அதிமுக குறித்து முதல்வர் விமர்சனம் செய்வது கேலி கூத்தானது. வெறும் 2 லட்ச வாக்குகளில் 43 சட்டப்பேரவைத் தொகுதிகளை இழந்திருக்கிறோம். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிற தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

திமுக பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டன. நிறைவேற்ற முடியாத பல திட்டங்களை அறிவித்து, கொள்ளைப் புறமாக ஆட்சிக்கு வந்தனர். கல்விக் கடனை ரத்து செய்யவில்லை, கேஸ் சிலிண்டர் மானியம் கொடுக்கவில்லை, பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்யவில்லை, அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவித்தனர். ஆனால் எதையும் செய்யவில்லை.

அதிமுகவின் அழுத்தம் காரணமாகவே ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையை வழங்குகின்றனர். தேர்தலுக்காகத் தான் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுக்கிறார்கள். பெண்களின் மீது உள்ள பாசத்தால் அல்ல. போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறையிலும் ஊழல் நடத்துள்ளது. திமுக அரசு பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம். நிறைய ஊழல் செய்துவிட்டீர்கள், இந்த பணத்தையாவது மக்களுக்கு கொடுங்கள்.

தற்போது முதல்வர் ஸ்டாலின் மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டார். தேர்தல் நெருங்குவதால் மடிக்கணினி திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்கள். 15 நாட்கள் நெல் கொள்முதல் நிலையத்தை மூடியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். திமுக அரசால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் ஊழலும் போதைப் பொருளும் அதிகரித்துள்ளது. கரோனா காலத்தில் வரியே இல்லாமல் ஓராண்டு காலம் ஆட்சியை நடத்திக் காட்டினோம். விலைவாசி தற்போது உயர்ந்துள்ளது.

திமுக ஆட்சியில் இருக்கும்நிலையில், அதன் அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2026 தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும், அதிமுக ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. உடல் உறுப்பை விற்று பிழைப்பு நடத்தக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த முறைகேடு குறித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

SCROLL FOR NEXT