படம்: எல்.சீனிவாசன்
சென்னை: தேர்தல் வாக்குறுதிகளால் கடன்சுமை அதிகரிக்காது. நிர்வாகத் திறமை இருந்தால் கடன் சுமையை சமாளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
அதில் அவர் வெளியிட்ட சலுகைகளை முன்வைத்து, மகளிருக்கு மாதம் ரூ.2,000, ஆண்களுக்கும் இலவச பேருந்து என்று வழங்கினால் தமிழகத்தின் கடன் சுமை மேலும் அதிகரிக்காதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்
அதற்குப் பதிலளித்த இபிஎஸ், “நிர்வாகத் திறமை இருந்தால் கடன்சுமையை சமாளிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கடன்சுமை பற்றி விரிவாகப் பேசும்போது, “அதிமுக ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.518 ஆயிரம் கோடி தான் கடன்சுமை இருந்தது. கரோனா காலக்கட்டத்தில் அரசுக்கு வரி வருவாய் கிடையாது. இருப்பினும் கரோனாவுக்கு ரூ.40 ஆயிரம் கோடி செலவு செய்த பிறகும், நாங்கள் நிதிச் சுமை குறைவாக இருக்கும் சூழலை தான் உருவாக்கி கொடுத்தோம்.
ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடன்சுமை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியை நிறைவு செய்யும் சமயத்தில், ரூ.5.5 லட்சம் கோடி கடன் சுமை இருக்கும் சூழல் உள்ளது. நிர்வாகத் திறமை இருந்தால் கடன்சுமையை சமாளிக்கலாம்.
அதிமுகவின் தேர்தல் தயாரிக்கும் குழு ஒவ்வொரு மண்டலமாக சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டு வருகிறார்கள். அவர்களின் கோரிக்கை அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இரண்டாம் கட்ட அறிக்கை வெளியான பிறகு, அதில் அனைத்து திட்டங்களும் உள்ளடங்கும்” என்றார்.
இபிஎஸ் அளித்த 5 வாக்குறுதிகள்: சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதற்கட்ட வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில், மகளிருக்கு மாதம் ரூ.2,000, ஆண்களுக்கு பேருந்து பயணம் இலவசம், 125 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக மாற்றப்படும், அம்மா குடியிருப்பு திட்டத்தின் கீழ் மனை வாங்கி, அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும், 5 லட்சம் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க, தலா ரூ.25,000 மானியம் வழங்கப்படும் ஆகிய 5 திட்டங்கள் அடங்கியுள்ளன.