கோப்புப் படம்
புதுச்சேரி: அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் முகாமிட்டிருப்பது ஏன் என்று அக்கட்சியின் புதுவை மாநிலச் செயலாளர் அன்பழகம் விளக்கமளித்துள்ளார். மேலும், மு.க. ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனம் வருந்தினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 25 க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ரிசார்ட்டுக்கு புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ இன்று காலை வந்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி வருந்தினார். அதிமுக ஒரு எஃகு கோட்டை. இதில் எந்த ஓட்டையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்எல்ஏ-க்களை கடலில் குதிக்கச் சொன்னாலும் அவர்கள் குதிப்பார்கள். எடப்பாடி பழனிசாமிதான் தலைமை பண்புள்ளவர்.
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் எம்எல்ஏக்கள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தான், அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி விடுதியில் தங்கி உள்ளனர். ஓரிரு நாட்களில் எடப்பாடி பழனிசாமியும் விடுதிக்கு வருவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.