எடப்பாடி பழனிசாமி

 
தமிழகம்

“பாலியல் குற்றங்களுக்கான முகவரியாக தவெக மாறி நிற்கிறது” - பழனிசாமி ஆவேசம்

தமிழினி

சென்னை: “தமிழகப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். உங்களுக்கு உதவி செய்வதாக முகம் தெரியாத நபர்கள், குறிப்பாக தவெகவினர் என்றால், உடனடியாக காவல் துறையை தொடர்பு கொள்ளுங்கள்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல நடித்து ஆளுங்கட்சி தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

“பெண்களைக் காப்பதில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும்” என்று சொல்லியபோது தனது கட்சிக்காரர்கள் இருப்பதை இன்றைய முதல்வர் மறந்துவிட்டாரோ என்னவோ, இப்படி ஆளுங்கட்சி தவெகவின் காமுக சார்களால் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

ஆட்சிதான் மாறியதே தவிர, காட்சி மாறவில்லை என்பதைப் போல், தற்போது பாலியல் சார்களுக்கான முகவரியாக தவெக மாறி நிற்கிறது. இவ்வளவு கொடுமைகளுக்கும் நடுவே “சிங்கப்பெண் அதிரடிப் படை” எங்கே போனது என்றும் தெரியவில்லை? Hibernation Mode? மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். உங்களுக்கு உதவி செய்வதாக முகம் தெரியாத நபர்கள், குறிப்பாக தவெகவினர் என்றால், உடனடியாக காவல் துறையை தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களை யாரேனும் தவறாக நெருங்க வருவதாக நினைத்தால், உடனே உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உபகரணங்களையும் உங்கள் கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள். “நமக்கு நாமே பாதுகாப்பு” என்பதே இந்த ஆட்சியின் அவல நிலை” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT