தமிழகம்

“ஒரு குடும்பத்தின் அதிகார பசிக்காக அடகு வைக்கப்பட்டுள்ளது தமிழகம்” - பழனிசாமி காட்டம்

தமிழினி

சென்னை: “ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே ஒரு குடும்பத்தின் அதிகார பசிக்காக அடகு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிவிட்டனர்” என கடுமையாக விமர்சித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய இருக்கும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில், “வாக்குரிமை நம் தலையெழுத்தை மாற்றும் ஜனநாயக ஆயுதம். வருகிற 23-ஆம் தேதி நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே ஒரு குடும்பத்தின் அதிகார பசிக்காக அடகு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிவிட்டனர்.

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுவிட்டது. பெண்களுக்கு எங்கேயும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. உயர் கல்வித் துறையை சீரழித்து விட்டனர். சந்து பொந்துகளில் எல்லாம் கஞ்சா போதை பொருட்களை விற்று மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கி விட்டனர். இந்த அராஜக, குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட உங்கள் வாக்கு தேவை.

குடிமரமரத்து திட்டத்தின் மூலம் நீர்நிலைகளை மீட்டெடுத்தது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது, அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக அரசு.

இந்த மக்கள் நல திட்டங்கள் மீண்டும் தொடர வேண்டும். சிறப்பான நமது தேர்தல் அறிக்கையின் மூலம் வளமான ஒரு எதிர்காலத்தை தமிழகத்துக்கு வழங்க இருக்கின்றோம். அதன் மூலம் தமிழகம் இன்னும் முன்னேற்றப் பாதையில் செல்லும். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெறும்” என்று பழனிசாமி பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT