சென்னை: “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள். எனவே, திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்டிட வேண்டும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு ‘கர்த்தவ்ய துவார்’ என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது.
இதற்கான எதிர்க்குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.
உலக நாடுகளுக்கு செல்லும்போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் "திருவள்ளுவர் இருக்கை" அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது.
இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்றுஅவர் தெரிவித்துள்ளார்.
தினகரன் வலியுறுத்தல்:
அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “திருச்சியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மண்டல ரயில்வே மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் ”கர்தவ்ய த்வார்” என இந்தி மொழியில் எழுதப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாள்தோறும் தமிழக மக்களும், ஏராளமான ரயில் பயணிகளும் வந்து செல்லும் ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதி வைக்க வேண்டிய பெயர்ப் பலகையை இந்தியில் மட்டுமே எழுதி வைத்திருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
எனவே, பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் திருச்சி ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் தமிழில் பெயர் வைக்கப்படுவதை உறுதி செய்வதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் ரயில்வே துறையையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.