சென்னை: “கூட்டணி என அறிவித்த பிறகு எல்லாவற்றையும் சமமாகத்தான் பார்க்க முடியும். இவர் பெரியவர், அவர் பெரியவர் என்பதெல்லாம் எங்கள் கூட்டணியில் கிடையாது” என அதிமுக பொதுச் செயலாளர் எடிப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அவரிடம், “பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவதாக தகவல் வந்திருக்கிறது. அதிமுக அந்த தொகுதியில் நேரடியாக களம் காணவில்லையா?” என கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர், “கூட்டணி என அறிவித்த பிறகு எல்லாவற்றையும் சமமாகத்தான் பார்க்க முடியும். இவர் பெரியவர், அவர் பெரியவர் என்பதெல்லாம் எங்கள் கூட்டணியில் கிடையாது. எல்லா கட்சிக்கும் பலம் இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் சேர்ந்தால்தான் வெற்றிபெற முடியும். சிறு துளி பெரு வெள்ளம். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள்.
எங்கள் கூட்டணியில் உள்ள ஜான் பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் விருப்பப்பட்ட சின்னத்தில் போட்டியிடலாம். திமுகவைப் போன்று கட்டுப்பாடுகள் எல்லாம் கிடையாது. நாங்கள் ஜனநாயக முறைப்படி செயல்படுவோம்” என்றார்.
அரசுக்கு எதிரான வாக்குகள் தவெக, நாதகவுக்கு செல்லுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “பிரதான கட்சி அதிமுக. எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் வாக்கு வங்கியுள்ள கட்சிகள். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். அதனால் திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் எங்களுக்கு தான் கிடைக்கும்.
திமுகவை அகற்ற வேண்டும் என மக்கள் நினைத்துவிட்டனர். மக்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு மட்டுமே எதிர்ப்பு ஓட்டு கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு கிடைக்காது. எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள்” என்றார் எடப்பாடி பழனிசாமி.