இபிஎஸ்
சென்னை: “தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. ஓபிஎஸ், சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன்” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அமித்ஷாவிடம் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து என்னிடம் கேட்டறிந்தார். அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுக்கோட்டைக்கு வந்தபோது அவரை சந்திக்க முடியாததால் டெல்லியில் சென்று சந்தித்தேன். கள்ளக்குறிச்சி, சேலத்தில் அதிமுக பொதுக்கூட்டம் இருந்ததால் அமித் ஷாவை நேரில் சந்திக்க முடியவில்லை.
யாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை என வெளிப்படையாக பேச முடியாது. ரகசியமாக இருந்தால்தான் அரசியல் கட்சிக்கு அந்தஸ்து உண்டு. தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமை. ஓபிஎஸ், சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமித் ஷா ஏற்கெனவே கூறிவிட்டார். தொடர்ந்து அப்படிதான் இருக்கிறது” என்றார்.
மேலும், அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவாரா? என்ற கேள்விக்கு இபிஎஸ் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மேலும், “ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.