இபிஎஸ்
ஈரோடு: “செங்கோட்டையன் எப்போது சிறுமையாக பேச ஆரம்பித்தாரோ, அப்போதே அவர் செல்வாக்கை இழந்துவிட்டார். முதலில் உங்களது சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியுமா எனப் பாருங்கள்?” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி, கச்சேரி மேடு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “செங்கோட்டையனை எம்எல்ஏ ஆக்க அதிமுக தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். அதிமுகவில் யாரையும் வளர விடாமல் செய்தவர். கட்சியில் இருந்து பலர் வெளியேற காரணமாக இருந்தவர் செங்கோட்டையன். இவர் மிக மோசமான ஆள்.
செங்கோட்டையன் மீது அவரது மனைவி, மகன் புகார் கூறியதால் அப்போது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. செங்கோட்டையனை மீண்டும் அமைச்சராக்கியது நான் செய்த தவறு. கண்ணீர் விட்டு கதறி அழுததால் அமைச்சர் பதவியை வழங்கினேன். செங்கோட்டையன் அவர்களே நான் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்கு தெரியாது. எனது ஒரு முகத்தைதான் நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள். இன்னொரு முகத்தை பார்த்தது இல்லை. நான், முதல்வர் ஸ்டாலின் கண்ணிலேயே கையை விட்டு ஆட்டியவன்.
அதிமுகவின் திட்டம் என்பதால் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது. அந்தத் திட்டத்திற்காக 5 ஆண்டுகள் அதிமுக போராடியது. விசில் அடிக்கும் கூட்டத்தில் இருந்தால் செங்கோட்டையனின் பேச்சு அப்படிதான் இருக்கும்.
செங்கோட்டையன் எப்போது சிறுமையாகப் பேச ஆரம்பித்தாரோ, அப்போதே அவர் செல்வாக்கை இழந்துவிட்டார். உங்களது சொந்தத் தொகுதியில் வெற்றி பெற முடியுமா என முதலில் பாருங்கள்.
அரசியல் ரீதியாக பேசுங்கள்; நான் அது குறித்து பதில் சொல்லத் தயார். ஆனால் தனிப்பட்ட முறையில் பேசினால் என்னிடம் நிறைய இருக்கிறது அவற்றை தொலைக்காட்சியில் போட்டு விடுவேன்.
பின்னர், நீங்கள் கோபியில் நடமாட முடியாது. நான் முதல்வராக இருந்தபோது யார் யார் என்ன செய்தார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியும். ஜாக்கிரதையாக இருங்கள். அரசியல் ரீதியாக அணுகுங்கள். செங்கோட்டையன் யாரையும் வளர விடமாட்டார். யாரவது நல்ல ஆடை அணிந்தால் கூட அவருக்கு பொறுக்காது. பணக்காரர்களை கண்டால் மட்டும்தான் பேசுவார்” இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.