தமிழகம்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக மோசடி: அமலாக்கத்துறை விசாரணை தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2021–2026 திமுக ஆட்சியின்போது, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்த்துதல் மற்றும் டிடிசிபி அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், திமுக பிரமுகருமான பி.டி.அரசகுமார், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாகப் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கடந்த ஜூன் 27-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது.

இவருடன் தொடர்புடைய சுரேஷ், ராஜா ஆகிய மேலும் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை 250-க்கும் மேற்பட்டோரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

அன்பில் மகேஸிடம் விசாரணை

இதன்தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த மாதம் 16-ம் தேதி சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அன்பில் மகேஸின் வீடுகள் மற்றும் உதவியாளர்களின் இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.

இதையடுத்து, கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அன்பில் மகேஸிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவரது முன்னாள் சிறப்பு உதவியாளர் அருள் முருகன் மற்றும் திருச்சி லால்குடியைச் சேர்ந்த உதவியாளர் வாளாடி கார்த்திக் ஆகியோரிடமும் பல கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன.

அன்பில் மகேஸின் நெருங்கிய நண்பரான முத்துக்குமார், சென்னை தி.நகரில் உள்ள ‘குளோபல் 360 டிகிரி’ என்ற நிறுவனம் மூலம் இந்த சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை களை மேற்கொண்டுள்ளதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முத்துக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால், அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கில் பல கோடி ரூபாய் அளவிலான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கலாம் என்பதால், அமலாக்கத்துறைக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

அதன்படி, மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ள எஃப்ஐஆரின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் 20 வங்கிக் கணக்குகள், முத்துக்குமார் தொடர்பான 29 வங்கிக் கணக்குகள் உள்பட காவல்துறையிடம் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களை அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகிறது.

இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் திரட்டி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டால், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், பி.டி. அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நேரடியாகச் சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கியிருப் பது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT