சென்னை: போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் ரூ.300 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் ஸ்டீல் நிறுவனம் தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, அண்ணா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு தனியார் ஸ்டீல் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தொழிற்சாலை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ளது.
இந்நிறுவனம், கடந்த 2008 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், பல்வேறு தவணைகளாக எஸ்பிஐ வங்கியில் ரூ.109 கோடி கடன் பெற்றுள்ளது. ஆனால், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியதுடன், அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக, கடந்த 2020-ம் ஆண்டு சிபிஐயிடம் வங்கியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில், ஸ்டீல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, இயக்குநர்கள் வடிவாம்பாள், சீனிவாசன் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
விசாரணையில், வங்கியில் பெற்ற கடனை தொழிலுக்குப் பயன்படுத்தாமல், சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளில் உள்ள தங்களது துணை நிறுவனங்களுக்குத் திருப்பி மோசடி செய்தது கண்டறியப்பட்டது.
இதன்மூலம், வங்கிக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ரு.300 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டது தெரியவந்தது. எனவே, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது.
விசாரணையின் தொடர்ச்சியாக, நேற்று சென்னை,திருவள்ளூரில் மொத்தம் 8 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணாநகர் 2-வது அவென்யூவில் உள்ள நிறுவனத்தின் அலுவலகம், அண்ணாநகர் மேற்கில் உள்ள மேலாண் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி,லட்சுமணசுவாமி ஆகியோரின் வீடுகளில் காலை முதல் சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல், அயனாவரத்தில் உள்ள பைனான்சியர் குல்நாஸ் பேகம் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.இச்சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.