சென்னை: நடிகை கவுதமியிடம் ரூ.25 கோடி சொத்து மோசடி விவகாரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பிரபல நடிகை கவுதமி, தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த 2004-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அதில் இருந்து மீண்டு வந்து, புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையரிடம் அவர் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், ‘சென்னை வேளச்சேரியை சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன், ஸ்ரீபெரும்புதூரில் எனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள 46 ஏக்கர் நிலத்தை, ரூ.6 கோடி கொடுத்து வாங்கி என்னை ஏமாற்றிவிட்டார். எனது புற்றுநோய் சிகிச்சைக்காகவும், என் குழந்தையின் செலவுக்காகவும் நிலத்தை விற்க வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டதை அறிந்து அவர் ஏமாற்றி விட்டார்’ என்று அதில் கூறியிருந்தார்.
காவல் ஆணையர் உத்தரவின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இதையறிந்த அழகப்பன் குடும்பத்துடன் தலைமறைவானார். நீண்ட தேடுதலுக்கு பிறகு, கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருந்த அவரையும், குடும்பத்தினரையும் போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, விசாரணையின்போது, அழகப்பனின் வீட்டில் இருந்து சில ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் ஆஸ்திரேலியாவில் அழகப்பன் குடும்பத்தினர் முதலீடு செய்ததற்கான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், அழகப்பன் சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரின் பரிந்துரை அடிப்படையில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அதற்கான ஆதாரங்களை திரட்டும் வகையில், சென்னை வேளச்சேரி, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அழகப்பனின் வீடுகள், அண்ணா நகரில் உள்ள அவரது நண்பர் வீடு ஆகிய 3 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல மதுரை, சிவகங்கை, காரைக்குடியிலும் அழகப்பன் தொடர்பு உடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதுதொடர்பான விவரங்களை தற்போது வெளியிட இயலாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.