கோவை உக்கடம் அன்புநகரில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய அசாருதீன் வீடு.படம்: ஜெ.மனோகரன்
கோவை / சென்னை: கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவை, சென்னை, மும்பை, ஐதராபாத் உள்பட 16 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவை உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் உக்கடம் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட இவ்வழக்கு, சம்பவத்தின் தீவிரத்தைக் கருதி தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. என்ஐஏ நடத்திய தீவிர விசாரணையில், காரில் வெடிபொருட்களை நிரப்பி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
இச்சம்பவம் தொடர்பாக முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான், முகமது தவுபீக் (25), உமர் பாரூக் (28), பெரோஸ்கான் (28), ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி, சதாம், அப்பாஸ், யூசுப் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்கள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், சதாம், அப்பாஸ், யூசுப் ஆகியோருக்குத் தொடர்புடைய கோவை மாவட்டத்தின் 5 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அந்தவகையில், கோவை மாவட்டம் உக்கடம் அன்புநகர், ஜி.எம்.நகர், கோட்டைப்புதூர் சன்கார்டன், சரவணம்பட்டி, போத்தனூர் ஆகிய 5 இடங்களில் உள்ள வீடுகளில் காலை முதல் இந்தச் சோதனைகள் நடைபெற்றது.
அதேபோல, சென்னை அரும்பாக்கம் மசூதி தெருவைச் சேர்ந்த ஜமீல் பாஷா உமர் (55) என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதுதவிர, கார் குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட மொத்தம் 16 இடங்களில் நேற்று அதிகாலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் துணை ராணுவப் படையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சட்டவிரோத செயல்களுக்கு நிதி திரட்டப்பட்ட பின்னணி குறித்து அமலாக்கத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கரோனா காலத்தில் பல்வேறு காரணங்களை தெரிவித்து பல்வேறு தரப்பினரிடம் நிதி திரட்டியது மற்றும் அதற்கு உதவியவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கவும், கரோனா காலத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக போலிச் சான்றிதழ்கள் தயாரித்துக் கொடுத்து சட்டவிரோதமாகப் பணம் திரட்டியது குறித்தும், திரட்டப்பட்ட நிதியை கார் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கும், பிற தீவிரவாத இயக்கங்களுக்கும் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது குறித்துக் கண்டறியவும் அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டதாக தெரிகிறது.
மாலை வரை நடைபெற்ற இந்த சோதனையில், மின்னணு சாதனங்கள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ஆய்வின் முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பான முழு விவரங்களை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.