சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரும் தவெக புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளருமான சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ள நிலையில், நவ.18-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது மற்றும் குட்கா முறைகேடு தொடர்பாகப் புகார்கள் எழுந்தன.
இதன் அடிப்படையில், கடந்த 2021-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். தொடர்ந்து, அமலாக்கத் துறையும் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யாவிடம் விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், ரூ.35.79 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நவ.6-ம் தேதி ஆஜராக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால், இருவரும் ஆஜராகவில்லை. இதுகுறித்து இருவரிடமும் அமலாக்கத் துறை விளக்கம் கேட்டுப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, விஜயபாஸ்கர் நவ.18-ம் தேதியும், அவரது மனைவி 19-ம் தேதியும் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை இருவரும் ஆஜராவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.