சென்னை: அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றத்துக்கு ரூ.1 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாக, அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, 3-வது முறையாக டிஜிபி-க்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பி உள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனியார் நிறுவனம் ஒன்றில் நடைபெற்ற சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், அக்டோபரில் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தது.
சுமார் ரூ.1,020 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பான 252 பக்க ஆதார ஆவணங்கள், வாட்ஸ்-அப் உரையாடல்கள் மற்றும் ஹவாலா பரிவர்த்தனை விவரங்களையும் அமலாக்கத் துறை சமர்ப்பித்திருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகத் துறையில் பணியிட மாற்றத்துக்காக அரசு அதிகாரிகளிடம் இருந்து ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாக புதிய புகாருடன் 100 பக்கங்கள் கொண்ட 3-வது கடிதத்தை டிஜிபிக்கு அமலாக்கத் துறை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சியில், நகராட்சி நிர்வாகத் துறையில் அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்காக ரூ.365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான விரிவான ஆவணங்கள் அடங்கியுள்ளதாகவும், அரசு அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட லஞ்ச பணம் குறித்த பணப்பரிமாற்றம் தொடர்பான அனைத்து விவரங்களும் அமலாக்கத் துறைக்கு தெரியும் என்றும், அதுதொடர்பான ஆவணங்களும் இந்த 100 பக்ககடிதத்தில் இணைத்திருப்பதாகவும் கடிதத்தில், கூறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த தகவலும், ஏப்ரல் மாதம் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாக கிடைத்ததுதான் என்றும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் நேரு இக்குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் சூழலில், அமலாக்கத் துறையின் தொடர் நடவடிக்கைகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.