தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி. உள்பட 37 எம்.பி. பதவிகளுக்கு மார்ச் 16-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,10 மாநிலங்களில் 37 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு வரும் மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும். பிப்.26-ம் தேதியன்று இதற்கான அறிவிக்கை வெளியாகும். வேட்புமனுக்கள் தாக்கல் அன்றைய தினமே தொடங்கும். மார்ச் 5, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். மார்ச் 9-ல் வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். வாக்கு எண்ணிக்கையானது வாக்குப் பதிவு நாளிலேயே நடைபெறும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 26-ம் தேதியுடன் 37 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 6 எம்.பி.க்கள் பதவி.. தமிழகத்தில் திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, பி.செல்வராசு, கனிமொழி என்விஎன் சோமு, அதிமுகவின் தம்பிதுரை, அதிமுக கூட்டணியில் உள்ள தமாகவின் ஜிகே வாசன் உள்ளிட்டோரின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனால், திமுக 4 எம்.பி.க்கள், அதிமுக 2 எம்.பி.க்களை நிறுத்த வேண்டும்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணியே இழுபறியாக இருக்கும் நிலையில் மார்ச் 16 மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இது திமுக, அதிமுகவுக்கு சீட் ஒதுக்குவதில் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.