சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்காக கடைகள் அமைக்க இடம் ஒதுக்கித்தர உத்தரவிடக் கோரி, சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கத்தின் செயல் தலைவரான நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் இ-டெண்டர் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அக்.23-ம் தேதி டெண்டர்கள் திறக்கப்பட்டதாகவும், 2 டெண்டர்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டு, அதில் சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கத்துக்கு இ-டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், தீவத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக, டெண்டர் ஒதுக்கீட்டு உத்தரவுகளை உடனே வழங்க வேண்டும் என, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.