திருச்சி தில்லை நகரில் தனது வீடு முன்பு குவிந்த திமுகவினரை கலைந்து போகுமாறு கூறிய கே.என்.நேரு.

 
தமிழகம்

தமிழகம் முழுவதும் கே.என்.நேரு தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக 241 ஆவணங்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை/ திருச்சி: ​தி​முக முன்​னாள் அமைச்​சர் கே.என்​.நேரு மற்​றும் அவரது சகோ​தரர்​களின், வீடு, அலு​வல​கங்​கள் என சென்​னை, திருச்​சி, கோவை, ஈரோடு, திருப்​பூரில் மொத்​தம் 30 இடங்​களில் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் நேற்று சோதனை நடத்​தினர். இதில் டெண்​டர் முறை​கேடு​கள் தொடர்​பான 241 ஆவணங்​கள், மின்​னணு ஆதா​ரங்​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளன.

திமுக முதன்​மைச் செய​லா​ள​ரும், முன்​னாள் நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்​சரு​மான கே.என்​.நேரு​வுக்கு தொடர்​புடைய இடங்​களில் லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் நேற்று சோதனை நடத்​தினர். திருச்சி தில்​லைநகரில் உள்ள நேரு வீட்​டில் 10-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் நேற்று காலை 7.45 மணி முதல் சோதனை நடத்​தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ், மேயர் அன்​பழகன், எம்​எல்ஏ கதிர​வன் உள்​ளிட்​டோர் அவரது வீட்​டுக்கு வந்​தனர். கட்​சித் தொண்​டர்​கள், ஆதர​வாளர்​களும் ஏராள​மானோர் குவிந்​தனர். பிற்​பகல் 3 மணி வரை சோதனை நடை​பெற்​றது.

கடந்த திமுக ஆட்​சி​யின்​போது திருச்சி மாநக​ராட்​சி​யில் நகரப் பொறி​யாள​ராக பணி​யாற்​றிய சிவ​பாதத்​தின் (தற்​போது திரு​வண்​ணா​மலை மாநக​ராட்​சி​யில் பணி​யாற்​றுகிறார்) புத்தூர் குமரன் நகர் வீடு, நேரு​வின் நேர்​முக உதவி​யாள​ராகப் பணி​யாற்​றிய மணி​கண்​டனின் (தஞ்சை மாநக​ராட்​சி​யில் உதவி ஆணை​ய​ராக உள்​ளார்) திரு​வானைக்​காவல் வீட்​டிலும் சோதனை நடத்​தப்​பட்​டது.

சென்னை மயிலாப்பூரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்ற கே.என்.நேருவின் வீடு.

சென்னை மயி​லாப்​பூரில் உள்ள நேரு​வின் வீடு, ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் உள்ள அவரது சகோ​தரர் கே.என்​.ர​விச்​சந்​திரனுக்​குச் சொந்​த​மான தனி​யார் நிறுவன தலைமை அலு​வல​கம், வீட்​டிலும் சோதனை நடந்​தது. வீட்​டில் இருந்த ரவிச்​சந்​திரன், அவரது மனை​வி​யிடம், கைப்​பற்​றிய ஆவணங்​களின் அடிப்​படை​யில் போலீஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

திரு​வான்​மியூர், அடை​யாறு, அண்ணா நகர், ஆழ்​வார்​பேட்​டை​யில் நேரு​வின் மற்​றொரு சகோ​தரர் கே.என்​.மணிவண்​ணன் மற்​றும் குடும்​பத்​தினரின் வீடு​கள், அலு​வல​கங்​கள் என 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் சோதனை நடை​பெற்​றது. கோவை​யில் சிங்​காநல்​லூர் - ராம​நாத​புரம் வழித்​தடத்​தில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்பு வளாகத்​தில் உள்ள கே.என்​. மணிவண்​ணனின் ரியல் எஸ்​டேட் நிறுவன அலு​வல​கத்​தி​லும் சோதனை நடத்​தப்​பட்​டது. கோவை உட்பட பல்​வேறு மாநக​ராட்​சிகளில் பணி​யாற்றி ஓய்​வு​பெற்ற பெண் அதி​காரி சசிபிரி​யா​வின் வீடு சுங்​கம் அடுத்த சிவ​ராம் நகரில் உள்​ளது. இங்​கும் அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி காம​ராஜர் சாலை​யில் உள்ள தமிழ்​நாடு குடிநீர் வடி​கால் வாரிய முதல்​நிலை ஒப்​பந்​த​தா​ரர் வேலுமணி​யின் வீடு, திருப்​பூர் சாலை​யில் உள்ள அவரது அலு​வல​கத்​தில் சோதனை நடத்​தப்​பட்​டது. காங்​கே​யம் சேரன் நகரிலும் ஒரு​வரது வீட்​டில் அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

ஈரோடு பெருந்​துறை சாலை​யில் உள்ள தனி​யார் கட்​டு​மான நிறுவன அலு​வல​கம், ஈரோடு பழைய​பாளை​யத்​தில் உள்ள அதன் உரிமை​யாளர் வீட்​டிலும் சோதனை நடத்​தப்​பட்​டது.

அந்த வகை​யில், சென்​னை, திருச்​சி, கோவை, ஈரோடு, திருப்​பூரில் மொத்​தம் 30 இடங்​களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதில் டெண்​டர் முறை​கேடு​கள் தொடர்​பான 241 ஆவணங்​கள், மின்​னணு ஆதா​ரங்​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளன. வழக்​கின் புலன் விசா​ரணை தொடர்ந்து நடந்து வரு​கிறது என லஞ்ச ஒழிப்​புத் துறை தெரி​வித்​துள்​ளது.

சோதனை ஏன்? - நேரு​வின் சகோ​தரர் கே.என்​.ர​விச்​சந்​திரனின் கட்​டு​மான நிறு​வனம் அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்​த​தாக​வும், பணப் பரி​மாற்​றங்​களில் முறை​கேடு நடந்​த​தாக​வும் எழுந்த புகாரைத் தொடர்ந்து, வரு​மான வரித் துறை ஏற்​கெனவே சோதனை நடத்​தி​யது. அத்​துறை​யின் அறிக்​கை​யைத் தொடர்ந்​து, நேரு, அவரது மகன் மற்றும் அவரது சகோ​தரர்​களான மறைந்த தொழில​திபர் ராமஜெ​யம், ரவிச்​சந்​திரன், மணிவண்​ணனுக்கு தொடர்​புடைய 15-க்​கும் மேற்பட்ட இடங்​களில் அமலாக்​கத் துறை கடந்த 2025 ஏப்​ரலில் சோதனை நடத்​தி​யது.

இதில் கிடைத்த டிஜிட்டல் ஆதா​ரங்​கள், ஆவணங்கள் அடிப்​படை​யில், டிஜிபிக்கு அமலாக்​கத் துறை கடந்த 2025 அக்​டோபரில் விரி​வான கடிதம் அனுப்​பியது. ‘நக​ராட்சி நிர்​வாகத் துறை​ பணி நியமனத்தில் சுமார் ரூ.888 கோடி ஊழல் நடந்​துள்​ளது. டெண்​டர்​களில் லஞ்​சம் பெறப்பட்டுள்ளது. பணத்தை நேரடி​யாக மட்​டுமின்​றி, கட்சி நிதி​யாகவும் வசூலித்துள்ளனர்’ என்று தெரி​வித்த அமலாக்கத் துறை, இதுதொடர்​பான வாட்​ஸ்​அப் உரை​யாடல்​கள், ஹவாலா பரிவர்த்​தனை விவரங்​களை டிஜிபி​யிடம் சமர்ப்​பித்​தது.

ரூ1,020 கோடி முறைகேடு: ரூ1,020 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்​துள்​ள​தாக கடந்த திமுக ஆட்​சி​யின்​போதே அமலாக்​கத் துறை தெரி​வித்தும், அதி​காரி​கள் நடவடிக்கை​ எடுக்​க​வில்லை என புகார் எழுந்​தது. இதற்​கிடையே, நேரு உள்​ளிட்​டோர் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு உத்​தர​விடக் கோரி உயர் நீதிமன்றத்​தில் அதி​முக எம்​.பி. இன்​பதுரை வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, நேரு மீது விசா​ரணை நடத்த டிஜிபிக்கு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. பின்னர், மோசடி, நம்​பிக்கை துரோகம், கூட்​டுச் சதி உட்பட பல்​வேறு பிரிவு​களில் லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் வழக்கு பதிவு செய்​ததன் தொடர்ச்​சியாக, நேற்று சோதனை நடத்​தப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT