கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள பெரியார் அறிவுலகம். அடுத்த படம்: 3-வது தளத்தில் இயங்கி வரும் நிர்வாகப் பிரிவு அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார். படங்கள்: ஜெ.மனோகரன்
கோவை: போலி புத்தகங்கள் கொள்முதலில் நடந்த முறைகேடு தொடர்பாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில், ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் எனப்படும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டு, கடந்த மாதம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் கூடிய இந்த வளாகத்தில் நூலகங்கள், அறிவியல் கட்டமைப்புகளுடன் கூடிய வளாகங்கள், கூட்டரங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயர்களில், செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட போலி நூல்கள், அதிக விலைக்கு கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.
7 பேர் குழு: இதையடுத்து கோவை பெரியார் அறிவுலகத்தின் 4-வது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவு, 5 மற்றும் 6-வது தளங்களில் உள்ள ஆங்கில நூல்கள் பிரிவு ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த மேற்கண்ட பதிப்பகங்களின் 1,800 புத்தகங்கள் இங்கிருந்து அகற்றப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். நேற்று பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
டி.எஸ்.பி. இமானுவேல் ஞானசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், போலீஸார் என மொத்தம் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் காலை 11 மணிக்கு பெரியார் அறிவுலகத்துக்கு வந்தனர். அறிவுலகத்தின் 3-வது தளத்தில் உள்ள நிர்வாகப் பிரிவு அலுவலகத்துக்குச் சென்று அறைக்கதவை மூடினர். வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
4 மணி நேரம்: போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள், இங்கு கொண்டு வரப்பட்ட தேதி, புத்தகங்களை வாங்கி ரேக்குகளில் வைக்கப்பட்ட பணிகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் போலீஸார் சேகரித்தனர். தொடர்ந்து 4 மணி நேரம் நடந்த சோதனை மதியம் 3 மணிக்கு நிறைவடைந்தது. சோதனை தொடர்பாகவும், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் கருத்து தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.