தமிழகம்

வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கை முடித்து வைப்பதாக தாக்கல் செய்த அறிக்கையை திரும்பப்பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல்

முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: திமுக எம்எல்ஏ-வும், அதிமுக முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கை முடித்து வைப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை திரும்பப்பெற அனுமதி கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2011-16 அதிமுக ஆட்சிகாலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த தற்போதைய திமுக எம்எல்ஏ வைத்திலிங்கம், சென்னை பெருங்களத்தூரில் தனியார் நிறுவனம் பன்னடுக்கு அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட திட்ட அனுமதி வழங்க ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டி அறப்போர் இயக்கம் கடந்த 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தது.

இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2024-ம் ஆண்டு வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில் வைத்திலிங்கம், கடந்த ஜனவரி மாதம் திமுகவில் இணைந்தார்.

அதையடுத்து வைத்திலிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கடந்த திமுக ஆட்சியில் அறி்க்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதேபோல தமிழகத்தில் தவெக ஆட்சியமைத்துள்ள நிலையில், வைத்திலிங்கத்துக்கு எதிரான வழக்கை முடித்து வைப்பதாகக்கூறி தங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை திரும்பப்பெற அனுமதி கோரியும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரியும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது இந்த வழக்கை முடித்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து தங்கள் தரப்பிலும் மனு தாக்கல் செய்துள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு வைத்திலிங்கம் தரப்பில், இந்த வழக்குக்கும், அமலாக்கத் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கில் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கெனவே தாக்கல் செய்த அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டுமென அறப்போர் இயக்கம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதையடுத்து, அமலாக்கத் துறையின் மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்து முதலில் முடிவு செய்யப்படும் என தெரிவித்த நீதிபதி, அனைத்து மனுக்களின் மீதான விசாரணையை ஜூன் 29-க்கு தள்ளிவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT