துரை வைகோ
கோவை: “தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (நவ.18) கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது.
காவிரி நதிநீர் தீர்ப்பாயமும் இது தொடர்பாக தெளிவாக கூறியுள்ளது. ஆனால், கர்நாடக முதல்வர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரித்து, தவறான கருத்தை, பொய்யான தகவலை கூறி வருகிறார்.
அரசு விழாவில், பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டே, கர்நாடக முதல்வர் தவறான கருத்தை கூறுகிறார். கர்நாடக முதல்வரின் இந்த பேச்சு கண்டிக்கதக்கது. இரண்டு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சினைக்குரிய தீர்வை மத்திய அரசு கூற வேண்டும்.
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு, கர்நாடக அரசைக் கண்டித்து சட்டரீதியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நீர் மேலாண்மை அமைப்பு வழங்கிய தகவல்களைக் கூட கர்நாடக அரசு முறையாகப் பின்பற்றவில்லை.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் மக்கள் தீர்ப்பை ஏற்காமல், மறைமுக கூட்டணியை உருவாக்க பார்த்தார் திமுக தலைவர்.
ஆனால், அது நடக்கவில்லை. அதன் பின்னர், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகளை எடுத்து வந்தனர். 6 மாதம் கடந்தும் இந்த ஆட்சி தொடர்ந்து வருகிறது. நான் கேள்விப்பட்டவரை ஒவ்வொரு எம்.எல்.ஏக்கும் ரூ.40 கோடி வரை கொடுக்க திமுக தலைமை தயாராகி இதற்கான முயற்சிகளை எடுத்துள்ளனர். குதிரை பேரம், கழுதை பேரத்தில் திமுக தலைமை ஈடுபட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. குறுஞ்செய்தி விவகாரம் தொடர்பாக யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், அதுபோன்ற ஒரு நிகழ்வே நடக்கவில்லை என தொடர்புடைய எம்.எல்.ஏ கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியரும் இது தொடர்பாக புகார் அளித்ததாக தெரியவில்லை.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக பொதுக்கூட்டத்தில் பெண்கள் குறித்து தவறாக பேசினார். அதனால் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த 30 வருடங்களில் தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிமுக, திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த ஜெம் வீரமணி வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவெக ஆட்சியில் நேர்மையாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதலில் உரிய வழிமுறைகளை பின்பற்றியிருந்தால் முறைகேடுகள் நடத்திருக்காது.
இந்தியாவிலேயே நூலகங்களில் நூதன முறையில் ஊழல் நடந்தது தமிழகத்தில் மட்டும்தான். கடந்த காலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. தவெக ஆட்சி நீடிக்கக் கூடாது என திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.