துரை வைகோ

 
தமிழகம்

நாடாளுமன்றத்தில் இந்தியில் பேசியது எப்படி? - துரை வைகோ விளக்கம்

எம்.கே.விஜயகோபால்

திருச்சி: “தவெக அரசில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதியாக இருக்கும். தற்போதைய அமைச்சர்கள் பலரும் புதியவர்கள் என்பதால் நிர்வாக அனுபவத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆட்சியை மேலும் சிறப்பாக வழிநடத்த, தேவைப்பட்டால் அமைச்சரவையில் முதல்வர் மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளது” என்று எம்பி துரை வைகோ கூறினார்.

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடமுருட்டி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைப்பது தொடர்பாக, திருச்சி நாடாளுமன்ற எம்பி துரை வைகோ நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான சர்ச்சையில் சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாரும் கிடையாது. முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். சம்பந்தப்பட்ட எம்எல்ஏ தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரோ அல்லது அவரது கணவரோ அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்து, விசாரணையில் தவறு நிரூபிக்கப்பட்டால், முன்னுதாரணமாக அந்த எம்எல்ஏ நிச்சயம் கைது செய்யப்படுவார். தவெக அரசில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதியாக இருக்கும்.

தற்போதைய அமைச்சர்கள் பலரும் புதியவர்கள் என்பதால் நிர்வாக அனுபவத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆட்சியை மேலும் சிறப்பாக வழிநடத்த, தேவைப்பட்டால் அமைச்சரவையில் முதல்வர் மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளது.

பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கர் விவகாரத்தை பொறுத்தவரை, பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவரது நடவடிக்கையை திருத்திக் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையரின் தவறுகளை சுட்டிக்காட்டி 4 நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசினேன்.

எனக்கு இந்தி தெரியாது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுவிட்டு, டெல்லி நண்பர் ஒருவர் ஆங்கில எழுத்துகளில் எழுதி கொடுத்த வாசகத்தை மட்டுமே வாசித்தேன். அதையும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகாயிடம் சரிபார்த்த பிறகே பேசினேன். நான் ஆங்கிலத்தில் பேசியதை வெட்டிவிட்டு, இந்தியில் பேசியதை மட்டும் காட்டி திமுக ஐடி விங் மற்றும் அதன் சார்பு ஊடகங்கள் அவதூறு பரப்புகின்றன.

நான் 6-ம் வகுப்பு படித்தபோது கட்டாய இந்தி இருந்ததால், எனது தந்தை தலைவர் வைகோ என்னை உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்றினார். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல; ஆனால், எந்தவொரு மொழியையும் கட்டாயமாகத் திணிப்பதை எப்போதும் எதிர்ப்போம்.

கோவை, மதுரைக்கு இணையாக திருச்சிக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என முதல்வரிடம் அளித்த 12 முக்கிய கோரிக்கைகளில் வலியுறுத்தியுள்ளேன். இதேபோல், திருச்சி - கரூர் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்” என்று அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT