புதுச்சேரி: அறுதிப் பெரும்பான்மை இல்லாத சூழலில், தவெக சார்பில் ஆதரவு கேட்டு விசிகவுக்கு கடிதம் வந்துள்ளது. மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க விஜய் உறுதியாக இருக்கிறார் என்று விசிக பொதுச்செயலர் ரவிக்குமார் தெரிவித்தார்.
புதுச்சேரியில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக நடந்த விசிக ஆர்ப்பாட்டத்தில் பேசிய ரவிக்குமார் பின்னர் நடத்தினர். இதற்கு புதுச்சேரி விசிக முதன்மை செயலர் அரிமாத் தமிழன் தலைமை வகித்தார். கட்சியின் பொதுச்செயலரும் விழுப்புரம் எம்.பி.யுமான துரை ரவிக்குமார் கண்டன உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று புதுச்சேரி மக்களிடம் திணித்துள்ளனர். மும்மொழி கொள்கையை நாங்கள் ஏற்பதில்லை. இரு மொழி கொள்கையே சரியானது. பாஜக கூட்டணி அமைத்த பிறகு அவர்கள் அழுத்தத்துக்கு ரங்கசாமி பணிந்து, நம் மக்களின் மொழி உரிமையை விட்டு கொடுத்துள்ளார்.
மும்மொழி கொள்கையில் மூன்றாவது மொழியாக பிரெஞ்சு இருக்கும் என்பதால் அமைதியாக இருந்தோம். மும்மொழி கொள்கை என்பதே இந்தி திணிப்பின் தந்திரம் என்பதை பாஜக நிருபித்துள்ளது. இதனால்தான் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என திமுக அரசு உறுதியாக இருந்தது.
புதுச்சேரி அரசு அரசாணையை திரும்பப் பெற வேண்டும். பிரெஞ்சு படிக்க ஏற்பாடு செய்து, இந்தி திணிக்கும் முயற்சிக்கு அரசு உடந்தையாக இருக்கக் கூடாது. இந்தியைத் திணித்தால் மிகப்பெரிய மொழி போராட்டமாக மாறும். மேலும் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரிகள் விசிக ஆதரவை தவெக கேட்டுள்ளது. இதுதொடர்பாக எங்கள் தலைவர் உரிய விளக்கம் அளிப்பார். இதுவரை தவெக மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உறுதியாக இருக்கிறது. அதனால்தான் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவை அவர்கள் கோரியுள்ளனர் என்றார்.