சிவகங்கை: ஓபிஎஸ் மவுனத்தால் சிவ கங்கை மாவட்டத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தினர், அதிமுகவுக்கு தாவத் தொடங்கியுள்ளனர்.
அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி யதும் தனது செல்வாக்கை நிரூபிக்க பழனிசாமி முடிவு செய்தார். அதற்காக அவர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாளர்கள் அதிகமுள்ள தென்மாவட்டமான சிவகங்கையில் கடந்த 2023 மார்ச்சில் மிகப்பெரிய பொதுக் கூட்டத்தை நடத்தினார்.
ஆனால், பொதுக் கூட்டத்துக்கு முந்தைய நாள் சிவகங்கைக்கு பழனிசாமி வருவதைக் கண்டித்து பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நடத்திக் காட்டினர். ஓபிஎஸ் அணியில் அப்போதைய கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த மருது அழகுராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்கெனவே ஓபிஎஸ் தரப்பு சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றிய போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பலர் ஆதரவாக இருந்தனர். அந்தளவுக்கு ஓபிஎஸ்-க்கு சிவகங்கை மாவட்டத்தில் அதிக ஆதரவாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், `அதிமுகவை மீட்போம்' என்ற சபதத்துடன், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் கழகத்தை ஓபிஎஸ் தொடங்கியும் எந்தவிதப் பலனும் இல்லை. ஓபிஎஸ்-க்கு பக்கபலமாக இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.
ஓபிஎஸ்-ன் நம்பிக்கைக்குரிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மர் எம்.பி.யும் மீண்டும் அதிமுகவிலேயே இணைந்தார். சமீபத்தில் அதிமுகவில் இணையத் தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தும், அதை பழனிசாமி ஏற்கவில்லை.
அதன் பின்னரும் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஓபிஎஸ் மவுனம் காத்து வருகிறார். இதனால் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளனர். இதைப் பயன்படுத்தி சிவகங்கை மாவட்ட அதிமுக நிர்வாகிகள், ஓபிஎஸ் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
அதிமுக மாவட்டச் செயலா ளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. முன்னிலையில் இளையான்குடி தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தினர் நேற்று அதிமுகவில் இணைந்தனர்.
இதுகுறித்து அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த சிலர் கூறுகையில், ‘ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மருதுஅழகுராஜ் உள்ளிட்டோர் திமுகவில் சேர்ந்தாலும், நாங்கள் தாய்க் கழக மான அதிமுகவில் சேரத்தான் விருப்பமாக இருந்தோம்.
மேலும் ஓபிஎஸ்-ம் தனது அரசியல் நிலைப்பாட்டை விரைந்து எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறார். இதனால், அவரை நம்பிப் பயனில்லை என்பதால் அதிமுகவில் இணைந்தோம். தொடர்ந்து பலர் அதிமுகவில் சேர உள்ளனர்’ என்றனர்.