சேலம்: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இருந்ததை விட, தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு இதுவே முக்கிய காரணம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கோவையில் கல்லூரி மாணவரை, சக மாணவர்கள் கொலை செய்தது மிகவும் துயரமானது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். இந்த விவகாரத்தில் அரசு முழு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. கடந்த 5 ஆண்டுகளில் இருந்ததை விட, தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு இதுவே முக்கிய காரணம். போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல போராட்டங்கள் நடந்துள்ளன. விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக போராடி வருகின்றனர். மேகேதாட்டு பிரச்சினைக்காக, அதிமுக போராட்டம் நடத்தியுள்ளது. எந்த ஆட்சியிலும் குறுகிய காலத்தில் விலைவாசி உயர்வு ஏற்படவில்லை. ஆனால், தவெக ஆட்சியின் குறுகிய காலத்தில் அரிசி விலை கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
மேகேதாட்டு விவகாரத்தில், அனைத்துக் கட்சி கூட்டம், டெல்டா விவசாயிகளின் கூட்டம் நடத்தி, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். சேலம் உள்பட 20 மாவட்டங்களுக்கு குடிநீர் கிடைக்காது. ஆனால், மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசு மெத்தனமாக உள்ளது.
அக்கட்சி ஆட்சி அமைக்க துணை புரிந்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகியவை வலியுறுத்தியும் கூட, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படவில்லை. காரணம், காவிரி விவகாரம் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.
தமிழகத்தில் ஏற்கனவே வறட்சி நிலவுகிறது. காவிரியில் நீர் வேண்டும் என்று ஜூன் மாதத்திலேயே கேட்டிருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் தான் தவெக அரசு வழக்கு தொடர்ந்தது. ஜூனில் 9.15 டிஎம்சி, ஆகஸ்ட்டில் 45 டிஎம்சி பெற்றிருக்க வேண்டும்.
காவிரி நீரைப் பெறாததால், ஏற்கனவே, குறுவை சாகுபடி நடக்கவில்லை. இப்போது சம்பாவுக்கும் வாய்ப்பில்லை. டெல்டாவில், நிலத்தடி நீரை நம்பி 2 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர். ஆனால், நீரின்றி 1 லட்சம் ஏக்கர் பயிர் வீணாகிவிட்டது. அந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று போராடினோம்.
தவெக கட்சி ஆரம்பித்து, 3 ஆண்டுகளில் அதன் தலைவர், மக்களின் எந்தப் பிரச்சினைக்காகவாவது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாரா? காலையில் தலைமைச் செயலகம் வந்துவிட்டு, மாலை 5 மணிக்கு வீடு திரும்பினால் அவரை பார்க்கவே முடியாது.
தவெகவின் 100 நாள் ஆட்சி ரீல்ஸ் ஆட்சியாக, ரீல் ஆட்சியாக இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்றவில்லை.
தொழில் முதலீட்டு மாநாடு நடத்தினார்கள். முதலீடு செய்ய வரும் நிறுவனங்கள், திட்டம் 1, திட்டம் 2 என விரிவாக்கம் செய்வார்கள். அப்படித்தான், அதிமுக, திமுக ஆட்சியில் ஏற்கனவே இங்கு முதலீடு செய்துள்ள நிறுவனங்கள், தற்போதைய முதலீட்டு மாநாட்டில் விரிவாக்கம் செய்துள்ளன. பெரிய அளவிலான முதலீடு, புதிய முதலீடு எதுவும் வந்ததாகத் தெரியவில்லை” என்றார்.
முன்னதாக, 11 நிறுவனங்களின் மதுவுக்கு டாஸ்மாக்கில் தடை விதிக்கப்பட்டது குறித்து கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, எனக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது, அதைப்பற்றி தெரியவில்லை என்றார்.
பேட்டியின்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன், எம்எல்ஏ., பழனி உள்பட அதிமுகவினர் பலர் உடனிருந்தனர்.