தமிழகம்

பிரதமர் மோடி பகிர்ந்த பாம்பன் பாலத்தின் ட்ரோன் வீடியோ வைரல்

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்த பாம்பன் பாலத்தின் ட்ரோன்  வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

உலக அளவில் இன்ஸ்டாகிராம் தளத்தில் 110 கோடி பின்தொடர்பவர்களைக் கடந்த முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி பிரதமர் நரேந்திர மோடி ஆவார். 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தை  10.6 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வமான இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பாம்பன் பாலம், அதில் ரயில் செல்லும் காட்சி, கப்பல் செல்வதற்காக தூக்குப் பாலம் தூக்கப்படும் காட்சி அடங்கிய 43 வினாடிகள் கொண்ட வீடியோவை பகிர்ந்து, ‘அற்புதமான பொறியியல் மற்றும் கண்கவர் கடல் காட்சிகள்’ என்று தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பகிர்ந்த நான்கே மணி நேரத்தில் 5 லட்சத்து 30 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த  06.04.2025-ல் திறந்து வைத்தாா். இந்த புதிய ரயில் பாலத்தின் நடுவே கப்பல்கள், படகுகள் கடந்து செல்வதற்கு செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப் பாலம் என்ற பெருமையும் கொண்டது.

செங்குத்து தூக்குப் பாலத்தின் இரண்டு கோபுரமும் தலா 33 மீட்டர் நீளம் கொண்டது. அதுபோல தூக்குப் பாலத்தின் கர்டர் 77 மீட்டர் நீளம் கொண்டது.  இந்த கர்டரின் எடை மட்டுமே 650 டன் ஆகும்.

செங்குத்து தூக்குப் பாலத்தை ஏற்றவும் இறக்கவும் மின் இயந்திரவியல் மோட்டார், இரும்பு கம்பி வடங்கள், சக்கரங்கள் போன்றவற்றை நிர்மாணிக்க தனி அறைகள் அறைகள் உள்ளன.

செங்குத்து தூக்குப் பாலம் எளிதாக மேலேயும், கீழேயும் சென்று வர  கோபுரங்களின் இருபுறமும்  செவ்வக வடிவிலான தலா 315 டன் எடை கொண்ட ஷீவ் லிப்ஃட்  அமைப்புகள், சக்கரங்களுடன் கம்பி வடங்களுடன் இணைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.  இந்த ஷீவ் அமைப்பு தூக்குப் பாலம் மேலே செல்லும்போது கீழேவரும், தூக்குப் பாலம் கீழே வரும்போது மேலே செல்லும் வகையில் லிஃப்ட் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் புதிய செங்குத்து தூக்குப் பாலத்தை அருகே உள்ள பாம்பன் சாலை பாலத்தின் உயரத்துக்கு நிகராக மேலே தூக்கவும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT