செங்கல்பட்டு: அக்.2-ம் தேதி மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறும் சாலைப் பேரணி நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக மதுராந்தகம் தொகுதியில் குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன் உள்ளிட்டவை பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வர் விஜய் பங்கேற்கும் சாலைப் பேரணி நிகழ்ச்சியை முன்னிட்டு, நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் முதல்வர் செல்லும் வழித்தடம், அவர் தங்கும் இடம் மற்றும் வருகை புரியும் இடங்கள் ஆகியவற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக, முதல்வரின் வருகை மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளை தற்காலிகமாக ‘ரெட் சோன்’ பகுதிகளாக அறிவித்து, அந்தப் பகுதிகளில் ட்ரோன் உள்ளிட்ட சிவில் ரிமோட்லி பைலட்டட் ஏர்கிராஃப்ட் சிஸ்டம் (RPAS) இயக்குவதற்கும், பறக்கவிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஊடகத்தினர் மற்றும் ட்ரோன் பயன்படுத்தும் பிற நபர்கள் இந்தத் தடையை கடைபிடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.