சென்னை: அயனாவரத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பனைமரம் விழுந்து ஓட்டுநர் உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவி உயிர் தப்பினார்.
சென்னை, தண்டையார்பேட்டை, விஓசி நகரை சேர்ந்தவர் அப்துல் வாஹித் (38). ஆட்டோ ஓட்டுநர். இவர் தினமும் பள்ளி மாணவர்களை தனது ஆட்டோவில் அழைத்து சென்று பள்ளியில் விடுவதும், பள்ளி முடிந்த பிறகு, அவர்களை வீட்டுக்கு அழைத்து வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
அயனாவரம் போலீஸ் மாணிக்கம் தெருவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல, நேற்று மதியம் பள்ளி முடிந்ததும், அவரை பள்ளியில் இருந்து ஆட்டோவில், வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.
ஆட்டோ, மேடவாக்கம் டேங்க் சாலை, அயனாவரம் சாலை சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்த போது, அயனாவரம் மனநல மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு வளாகத்தினுள் இருந்த பனைமரம் ஒன்று திடீரென சரிந்து, சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோவின் மீது விழுந்தது.
இதில், ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வாஹித் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த மாணவி, காயமின்றி உயிர் தப்பினார். இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள், ஆட்டோவினுள் சிக்கிய மாணவியை மீட்டனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தலைமை செயலக காலணி போலீஸார், உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வாஹித் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், மருத்துவமனை வளாகத்துக்குள் இருந்த பணை மரத்தின் அடிப்பகுதி முழுவதும் கரையான் அரித்திருந்ததும், இதனால், தானாகவே சரிந்து, விழுந்ததும் தெரிய வந்தது.