தமிழகம்

புழலில் குடிநீர் குழாய் உடைந்து 15 அடி ஆழத்துக்கு பள்ளம்: சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: புழல் பகு​தி​யில் பூமிக்கு அடி​யில் சென்ற குடிநீர் குழாய் நள்​ளிர​வில் திடீரென உடைந்​த​தால் சாலை​யில் தண்​ணீர் பெருக்​கெடுத்து ஓடியதுடன், சுமார் 15 அடி ஆழத்​துக்கு பள்​ளம் ஏற்​பட்​டது.

இதனால் அப்​பகு​தி​யில் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்டு பரபரப்பு ஏற்​பட்​டது. சென்னை புழல் மகளிர் சிறைச்​சாலை அருகே சென்னை குடிநீர் வாரி​யத்​துக்கு சொந்​த​மான வளாகம் உள்​ளது.

இங்​கிருந்து குடிநீர் சுத்​தி​கரிக்​கப்​பட்​டு, பூமிக்கு அடி​யில் பதிக்​கப்​பட்​டுள்ள குழாய்​கள் மூலம் புழல், அம்​பத்​தூர் சாலை, சென்​னை–​கொல்​கத்தா தேசிய நெடுஞ்​சாலை, மாதவரம் 200 அடி சாலை, மாதவரம், மணலி, மாத்​தூர், கீழ்ப்​பாக்​கம் உள்​ளிட்ட சென்​னை​யின் பல்​வேறு பகு​தி​களுக்கு கொண்டு செல்​லப்​படு​கிறது.

இந்​நிலை​யில், புழல் சைக்​கிள் ஷாப் அருகே சென்​னை–​கொல்​கத்தா தேசிய நெடுஞ்​சாலை​யில் பூமிக்கு அடி​யில் சென்ற குடிநீர் குழா​யில் நேற்று முன்​தினம் நள்​ளிர​வில் திடீரென உடைப்பு ஏற்​பட்​டது. குழா​யில் இருந்து அதி​கள​வில் குடிநீர் வெளி​யேறிய​தால் சாலை​யில் சுமார் 15 அடி ஆழத்​துக்கு பள்​ளம் ஏற்​பட்​டது.

மேலும், அரு​கில் உள்ள சர்​வீஸ் சாலைகளி​லும் குடிநீர் பெருக்​கெடுத்து ஓடிய​தால் சாலைகள் சேதமடைந்​தன. உடைந்த குழா​யில் இருந்து வெளி​யேறிய தண்​ணீர் புழல் எம்​.ஜி.ஆர். நகர் பகு​தி​யில் உள்ள 5 மற்​றும் 6-வது தெருக்​களி​லும் புகுந்து தேங்​கியது.

அதி​காலை​யில் வீடு​களில் இருந்து வெளியே வந்த மக்​கள் சாலைகளில் தண்​ணீர் பெருக்​கெடுத்து ஓடு​வதை​யும், அங்கு ஏற்​பட்​டுள்ள பள்​ளத்​தை​யும் கண்டு அதிர்ச்சி அடைந்​தனர். குடிநீர் குழாய் திடீர் உடைப்​பால் அப்​பகுதி மக்​களின் இயல்பு வாழ்க்கை சிறிது நேரம் பாதிக்​கப்​பட்​டது.

குடிநீர் விநியோகம் நிறுத்​தம்

இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை குடிநீர் வாரிய அதி​காரி​கள் மற்​றும் ஊழியர்​கள் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்​தனர். உடைந்த குழா​யில் இருந்து தொடர்ந்து தண்​ணீர் வெளி​யேறு​வதை தடுக்​கும் வகை​யில், சென்​னை​யின் குறிப்​பிட்ட பகு​தி​களுக்​கான குடிநீர் விநியோகத்தை தற்​காலிக​மாக நிறுத்​தி, குழாய் உடைப்பை சீரமைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

மேலும், சாலை​யின் இரு​புறங்​களி​லும் தடுப்​பு​கள் அமைத்து பள்​ளம் ஏற்​பட்​டுள்ள பகு​திக்​குள் பொது​மக்​கள் மற்​றும் வாக​னங்​கள் செல்​லாத வகை​யில் பாது​காப்பு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

குடிநீர் குழாய் உடைப்பு காரண​மாக சென்​னை–​கொல்​கத்தா தேசிய நெடுஞ்​சாலை​யில் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது. இதையடுத்து மாதவரம் போக்​கு​வரத்து போலீ​ஸார் சம்பவ இடத்​தில் போக்​கு​வரத்தை சீரமைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

SCROLL FOR NEXT