கரூர்: கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலில் 8,18,672 வாக்காளர்கள் உள்ளனர். 79,690 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் மீ.தங்கவேல் வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார்.
அதன் விவரம்: கரூர் மாவட்டத்தில் கடந்த அக்.27-ம் தேதி கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கரூரில் ஆண்கள் 1,13,285, பெண்கள் 1,27,517, இதரர் 46 என மொத்தம் 2,40,848 வாக்காளர்கள், அரவக்குறிச்சியில் ஆண்கள் 1,00,773, பெண்கள் 1,11,295, இதரர் 4 என மொத்தம் 2,12,072 வாக்காளர்கள், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,03,886, பெண்கள் 1,10,063, இதரர் 34 என மொத்தம் 2,13,983 வாக்காளர்கள், குளித்தலையில் ஆண்கள் 1,12,574, பெண்கள் 1,18,873, இதரர் 7 என மொத்தம் 2,31,459 வாக்காளர்கள் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் ஆண்கள் 4,30,518, பெண்கள் 4,67,753, இதரர் 91 என மொத்தம் 8,98362 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த நவ.4-ம் தேதி முதல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது அனைவருக்கும் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட படிவங்கள் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், முகவரியில் இல்லாதவர்கள் 9,844, குடியிருப்பு மாறியவர்கள் 43,576, இறந்தவர்கள் 23,829, இரட்டைப் பதிவு 2,295, பிற 146 என மொத்தம் 79,690 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.