கிருஷ்ணசாமி | கோப்புப் படம்

 
தமிழகம்

“எல்லா காலத்துக்கும் ரீல்ஸும், போலி கண்ணீரும் உதவாது” - தவெக மீது கிருஷ்ணசாமி தாக்கு

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: “எல்லா காலத்துக்கும் ரீல்ஸும், போலி கண்ணீரும் உதவாது. இளைஞர்களும், மாணவர்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர்கள் அதில் கவனம் செலுத்தாமல் திரைப்படம் பார்க்க சென்றுவிட்டனர்” என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது: “மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க புதிய தமிழகம் கட்சி சார்பில் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 8 மாதமாக மாஞ்சோலை மக்களுக்கு சட்டபூர்வ அடிப்படையில் வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை வழங்காதது கண்டிக்கத்தக்கது. அவற்றை உடனே வழங்க வேண்டும்.

மேலும் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க செய்ய வேண்டும்.

இப்பகுதிக்கு 5 முறை இயக்கப்பட்ட அரசுப் பேருந்து இப்போது ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்களால் மாஞ்சோலை மக்களை மறைமுகமாக வெளியேற்றும் நிலை உள்ளது.

தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாநகர பகுதியில் 2 நாளுக்குமுன் கைது செய்யப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்காக நடத்தப்படும் போராட்டத்துக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. அதேநேரத்தில் நீட் வினாத்தாள் விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தாமாக முன்வந்து ராஜினாமா செய்வதில் தவறு இல்லை.

தமிழகத்தில் ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. எல்லா காலத்துக்கும் ரீல்ஸும், போலி கண்ணீரும் உதவாது. அவை கொஞ்சநாள்தான் இருக்கும். இளைஞர்களும், மாணவர்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அமைச்சர்கள் அதில் கவனம் செலுத்தாமல் திரைப்படம் பார்க்க சென்றுவிட்டனர்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர்கள் இன்னும் ரசிகர்கள் மனநிலையில் இருந்து வெளியே வராமல் இருக்கிறார்கள். ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது. வாழ்வே ஜனநாயகமாக இருக்க வேண்டும். பூனைக்கும் நண்பன், பாலுக்கும் காவல் என்பதே நீட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT