வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு நேற்று இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் இருந்து அவரை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.படம்: என்.ராஜேஷ்.

 
தமிழகம்

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை - முழு விவரம்

76 நாளில் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி/ கோவில்பட்டி: விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விளாத்திகுளம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 17 வயது மகள் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தார். கடந்த மார்ச் 10-ம் தேதி இரவு வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மறுநாள் கிராமத்துக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

மாணவியை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் உட்பட பல்வேறு அமைப்புகள், கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். போலீஸார் 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (37) என்பவரை மார்ச் 19-ம் தேதி பிடித்து விசாரணை நடத்தினர். மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்தது அவர்தான் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்துவந்தது. விசாரணை அதிகாரியான விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன், சம்பவம் நிகழ்ந்த 20 நாட்களில், மார்ச் 31-ம் தேதி தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். தொடர்ந்து, தமிழக அரசு இந்த வழக்கின் சிறப்பு வழக்கறிஞராக வி.எல்லம்மாளை நியமித்தது.

71 சாட்சிகள் விசாரணை: இவ்வழக்கு விசாரணை போக்சோநீதிமன்ற நீதிபதி பிரீத்தா முன்பு நடந்து வந்தது. இதில், 71 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு விசாரணை 21-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்காக, மதுரை மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தர்ம முனீஸ்வரனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என்று நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார்.

தண்டனை தொடர்பான வாதங்களுக்குப் பிறகுநீதிபதி அளித்த தீர்ப்பில், பிரேதப் பரிசோதனை அறிக்கையை பார்க்கும்போது, கொடூரமாக தாக்கி மாணவியை கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கொலை செய்த குற்றத்துக்காக தூக்குதண்டனையும், போக்சோ சட்டத்தின்கீழ் ஒரு தூக்கு தண்டனையும், தடயங்களை மறைக்க முயன்றதற்காக ஓராண்டு சிறையும், இதனை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

இதுகுறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் வி.எல்லம்மாள் கூறும்போது, “இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. குற்றவாளி மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவாக அரசு தரப்பில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டதால் 10 நாட்களுக்குள் சாட்சியங்கள், அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டது” என்றார்.

விரைவான தீர்ப்பு: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கிய 76-வது நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 10-ம் தேதி மாணவி கொலை செய்யப்பட்டார். 31-ம் தேதியே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரலில் தொடங்கி மே 21-ம் தேதி விசாரணை நிறைவடைந்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆயுள் தண்டனை: குற்றவாளி தர்ம முனீஸ்வரன் ஏற்கெனவே எட்டயபுரம் அருகே கீழஈரால் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி பாப்பா (65) என்ற மூதாட்டியிடம் நகைகளை திருடி பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். அந்த வழக்

கில் ஜாமீனில் வந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில்தான் மாணவியை கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT