தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை
திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. அதனால் கூட்டணி குறித்து காங்கிரஸார் பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாத நிலையில், அதன் கூட்டணியில் சேர விரும்பாதவர்களை ஐடி, ஈடி, சிபிஐ ஆகியவற்றை பயன்படுத்தி, அச்சுறுத்தி கூட்டணியில் சேர மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்ப்பந்தம் செய்கிறார். மத்திய பாஜக அரசின் அடக்குமுறையால் பாதிக்கப்படாத அரசியல் கட்சிகள் தமிழகத்தில் இல்லை. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட விஷயங்களை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் கொள்கை சார்ந்த மதவாத, வகுப்புவாத சக்திகளை தமிழகத்தில் காலூன்ற முடியாத அளவுக்கு தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.
கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவை தேர்தல்களில் அதிமுக, பாஜக உள்ளிட்ட வகுப்புவாத, ஊழல் சக்திகளை தோற்கடித்து தமிழக மக்களின் பேராதரவோடு இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. இண்டியா கூட்டணியை பலகீனப்படுத்தும் பாஜக-வின் முயற்சி வெற்றி பெறுமேயானால், அதனால் பலனடையப் போவது அதிமுக - பாஜக கூட்டணி தான். இதன் மூலம் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்துவற்கு எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்கக் கூடாது.
சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியபடி, காங்கிரஸ் கட்சி அமைத்த ஐவர் குழுவினர் திமுகவுடன் முதற்கட்டமாக பேசியிருக்கிறார்கள். காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய விவகாரம் குறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்துக் கூறுவதை தவிர்க்க வேண்டும்.
அகில இந்திய அளவில் ராகுல் காந்தி, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை எதிர்த்து மக்களவையில் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக தமிழகம், புதுச்சேரி உட்பட திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 40 மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களும் ராகுல் காந்தியின் பின்னால் நாடாளுமன்றத்தில் இண்டியா கூட்டணி சார்பாக வகுப்புவாத பாஜக-வை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இத்தகைய அரசியல் பின்னணியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் புரிந்து கொண்டு, தமிழக நலனில் அக்கறையோடு, தேசிய நலனையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய கடமையும், பொறுப்பும் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதை கொள்கை ரீதியாக சிந்தித்துச் செயல்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.