கேரள வனத்துறை அமைச்சர் ஷிபு பேபி ஜான்

 
தமிழகம்

“பெரியாறு அணை ரீல்ஸை பெரிதுபடுத்த வேண்டாம்” - கேரள வனத்துறை அமைச்சர்

என்.கணேஷ்ராஜ்

கூடலூர்: "பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் பெரியாறு அணையை ட்ரோன் மூலம் படம்பிடித்ததை பெரிதுபடுத்த வேண்டாம். இது என்ன இந்தியா-பாகிஸ்தான் எல்லையா?" என்று கேரள வனத்துறை அமைச்சர் ஷிபு பேபி ஜான் தெரிவித்தார்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக சாகுபடிக்காக முல்லை பெரியாறு அணையிலிருந்து கடந்த 8-ம் தேதிதண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் க.சபரி ஐங்கரனும் பங்கேற்றார். அப்போது இவருடன் சென்ற குழுவினர் பெரியாறு புலிகள் காப்பகப் பகுதிக்குள் ட்ரோனைப் பறக்கவிட்டு, முல்லைப்பெரியாறு கால்வாய் மற்றும் வனப்பகுதிகளைப் படம் பிடித்தனர். பின்பு இந்த பதிவுகள் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விதிமுறைகளை மீறி ட்ரோனை பறக்கவிட்டது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள வனத்துறையினர் தெரிவித்தனர். இது இரு மாநிலங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று தமிழக கேரள எல்லையான குமுளியில் கேரள வனத்துறை சார்பில் ‘ஊரு உணர்வு’ திட்டத்தின் கீழ், பழங்குடியின மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்க கேரள வனத்துறை அமைச்சர் ஷிபுபேபி ஜான் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக எம்.எல்.ஏ -வுடன் வந்த குழுவினர், பெரியாறு அணைப் பகுதியைப் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இது என்ன இந்தியா-பாகிஸ்தான் எல்லையா? பதற்றப்படுவதற்கு. இது டிஜிட்டல் காலம். கூகுளில் தெருவாரியாகவே பார்க்க முடியும். இரு மாநிலங்களும் நல்லிணக்கத்துடன் இருக்கும் நிலையில் புதிதாக ஒரு பிரச்சினையை உருவாக்கவோ, பெரிதுபடுத்தவோ வேண்டாம்” என்றார்.

கூட்டத்தில் பீர்மேடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சிரியக் தாமஸ், கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் பிரமோத்ஜி கிருஷ்ணன், மாவட்ட வன அலுவலர் லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT