தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அதிமுக பாஜக கூட்டணியில் அமமுக இணையலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அமமுக தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி விவகாரத்தில் தமிழகத்தின் நலன் மற்றும் கழகத்தின் நலனை மையமாகக் கொண்டே கூட்டணி அறிவிக்கப்படும் என்பதை பொதுச்செயலாளர் அவர்கள் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானது.
இந்தச் சூழலில் சில ஊடகங்கள், கூட்டணி விவகாரத்தில் தயக்கம், குழப்பம், அழுத்தம் என பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதோடு, கடந்த சில தினங்களாக கழக நிகழ்ச்சிகளில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொள்ளவில்லை எனவும் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.
பொதுக்குழு நிகழ்ச்சிக்குப் பின்பாக, சொந்த வேலைகள் காரணமாகவும், பொங்கல் பண்டிகை நாட்கள் வருவதாலும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்படவில்லை. அதே நேரத்தில், கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரனுக்கு எந்தவொரு தயக்கமும், குழப்பமும், அழுத்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டினை அறிவிப்பார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
வருகின்ற 17ஆம் தேதி எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழா அன்று சென்னை, அண்ணாசாலையில் அமைந்துள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்கவுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.