சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சேர்ந்த தயாளன் (29) என்பவர் டிச. 31-ம் தேதி நள்ளிரவு நேரிட்ட விபத்தில் காயமடைந்தார். அவரை, நண்பர் அரசு அருகேயுள்ள செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள், பணியாளர்கள் இல்லாத நிலையில், அவர்களைத் தேடினார்.
அப்போது, மருத்துவர் ஓய்வறையில் வெளிநாட்டு ரக மது பாட்டில், அசைவ உணவுகள், நொறுக்குத் தீனிகள் சிதறிக் கிடந்தன. அவற்றை செல்போன் மூலம் வீடியோ எடுத்த அரசு, சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இது தொடர்பாக மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி விசாரணை நடத்தியதில், மது விருந்துடன் புத்தாண்டைக் கொண்டாடியது தெரியவந்தது.
இதையடுத்து, இரவுப் பணியில் இருந்த மருத்துவர் சசிகாந்த், விருந்தில் பங்கேற்ற மருத்துவர்கள் கவுசிக், நவீன்குமார், மணிரத்னம், மருந்தாளுநர் கமலக்கண்ணன் ஆகிய 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்டசுகாதார அலுவலர் மீனாட்சி உத்தரவிட்டார். மேலும், இரவுப் பணியில் இருந்த செவிலியர், மருத்துவப் பணியாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.