தமிழகம்

“திமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றதாக அடிக்கடி கூறுவதா?” - தவெகவுக்கு அதிமுக கண்டனம்

மோகன் கணபதி

சென்னை: “திமுக, அதிமுகவோடு இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக அடிக்கடி சட்டப்பேரவையில் தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் திமுகவோடு என்றைக்கும் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எங்கேயும் பேசவில்லை.” என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “இங்கு பேசிய உறுப்பினர் ஒருவர், அதிமுக திமுவோடு கூட்டணி அமைக்க முயன்றதாகக் குறிப்பிட்டார். அதிமுக யாருடைய தயவிலேயும் தமிழகத்தில் கட்சியை நடத்தவில்லை. அதிமுகவை நிறுவியவர் எம்ஜிஆர். அவருடைய மறைவுக்குப் பின்னால் இந்த இயக்கத்தை எஃகு கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா.

இந்த இருபெரும் தலைவர்களின் மறைவுக்குப் பின்னால், இந்த இயக்கத்தையும் இந்த இயக்கத்தின் தொண்டர்களையும் எடப்பாடி பழனிசாமி காப்பாற்றி வருகிறார். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தை கலங்கப்படுத்தி யார் பேசினாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 1.35 கோடி வாக்குகளுடன் 53 இடங்களைப் பெற்ற இயக்கம் அதிமுக. தனிப்பட்ட முறையில் 47 இடங்களை எடப்பாடி பழனிசாமி வென்றெடுத்திருக்கிறார்.

யாருடைய தயவிலும் நாங்கள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை. ஆனால், திமுக, அதிமுகவோடு இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக அடிக்கடி தவறான தகவலை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் எங்களை எதிர்க்கட்சியாக செயல்பட அனுமதித்திருக்கிறார்கள். நாங்கள் திமுகவோடு என்றைக்கும் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எங்கேயும் பேசவில்லை.

திமுக தீய சக்தி என்று சொன்னவர் எம்ஜிஆர், ஜெயலலிதா. அதே வழியில் அதிமுகவை தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி. எங்கள் இயக்கத்தைப் பற்றி யார் குறை சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கண்டிக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, அமைச்சர் ஆதவ் அர்ஜூன் பேசும்போது “தவெக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும். திமுகவின் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான அக்கார்டு ஹோட்டலில் குதிரை பேரத்தில் ஈடுபட்டது திமுகதான் என்பதை மக்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துகிறோம் என கூறி இருந்தார்,” என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT