நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்

 
தமிழகம்

“உங்கள் குற்ற உணர்ச்சிக்கு இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்காதீர்” - முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் சாடல்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘உங்களின் குற்ற உணர்ச்சிக்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த முதல்வர் விஜய், அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்? உங்கள் குற்ற உணர்ச்சிக்கு எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஆண்டு கரூரில் தங்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களை, அப்பொழுது கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த நீங்கள், முதல்வரான பிறகு அவர்களுக்கு “அரசுப் பணி” வழங்கி ஆறுதல் கூற முயன்றதை மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அரசுப் பணிகளை மட்டுமே இலக்காக வைத்து, இரவும் பகலும் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

1. தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரிகளில் முதல்வர் காலிப்பணியிடங்கள் உள்ளன.

2. அதே கல்லூரிகளில் சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன.

3. சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பல்கலைக் கழகங்களில் 50% -க்கும் மேற்பட்ட பேராசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளன.

4. அரசுப் பள்ளிகளில் 30.000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியப் பணியிடங்களும், 20,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியப் பணியிடங்களும் காலியாகக் கிடக்கின்றன.

5. 7000-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

6. நீலகிரி மின்சார வாரியத்தில் மட்டும் கிட்டத்தட்ட 61% காலிப்பணியிடங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

7. தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை, தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு வழங்க வேண்டுமென கேங்க்மேன்கள் போராடி வருகின்றனர்.

8. அதுமட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்கள். மருத்துவர்கள். அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உட்பட பல பிரிவினர் நிரந்தர அரசு வேலை வேண்டி கோரிக்கை விடுத்து, தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஆனால் நீங்களோ இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்விற்கு வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டுமே அறிவித்து, அரசு வேலையை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் மண்ணை வாரி தூற்றியுள்ளீர்கள்.

உங்களின் குற்றவுணர்ச்சியை திருப்திப்படுத்திக் கொள்வதற்காக அத்தனை அரசுப் பணிகளை யோசிக்காமல் உடனே தூக்கிக் கொடுத்த நீங்கள், அரசு கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மற்ற அரசு துறைகளில் உள்ள அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்?.

டெட், டிஆர்பி உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பல்லாயிரக் கணக்கானவர்கள் அரசு பணி நியமன ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கையில், துறை வாரியான ஆள்சேர்ப்பு மற்றும் பணி நியமனத்திற்கான கால அட்டவணையை உங்கள் அரசு ஏன் வெளியிடவில்லை?

எனவே, உங்கள் தனிப்பட்ட பாவச் செயல்களுக்கு, அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிகாரம் தேடுவதற்காக மட்டும் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள் ஜோசப் விஜய். கரூர் மக்களுக்கு எப்படி ஜெட் வேகத்தில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினீர்களோ அதே போல, மற்ற அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நீங்கள் உடனே நிரப்ப வேண்டும். அரசு வேலையை நம்பி காத்துக் கொண்டிருக்கும் லட்சோப லட்ச இளைஞர்களின் உழைப்பிற்கு மதிப்பு தர வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT