தமிழகம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம்: உயர் நீதிமன்றம் அறிவுரை

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என அமைச்சர்கள், திமுகவினருக்கு அறிவுறுத்தும்படி அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களை சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காமல் முந்தைய திமுக அரசு தப்பிக்க விட்டுவிட்டதாக தமிழக அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேட்டி அளித்திருந்தனர்.

அதேபோல, தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவும், திமுக அரசுக்கு எதிராக குற்றம்சாட்டி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது.

இது திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில் திமுக அரசு மீது குற்றம் சாட்டி கருத்துகள் தெரிவிக்க அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு தடை விதிக்க கோரி திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கும்படி அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தொழில்நுட்ப பிரிவுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தனர்.

ஜெம் வீரமணிக்கு எதிராக 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி புகார் வந்த நிலையில் மறுநாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், எந்த தலையிடும் இல்லாமல், எந்த தாமதமும் செய்யப்படாமல் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அந்த மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உண்மை நிலைக்கு மாறாக திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திமுக மீது குற்றம்சாட்டி அமைச்சர்கள் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட பதிவுகள் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘சென்னை உயர் நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட மெட்டா, யூடியூப், எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

அமைச்சர்கள் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டுமானால், முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற நோட்டீஸ் எதுவும் வழங்காமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல’ என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, வழக்கு தொடர அனுமதி கோரி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமைச்சர்கள், தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, சமூக வலைதள நிறுவனங்கள் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை திங்கள்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் நீதிபதி, ’வீரமணி தொடர்பான வழக்கை படிக்கும்போது மனம் பதறுகிறது. வழக்கு மிகவும் தீவிரமானது என்பதால், இந்த விவகாரம் குறித்து அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க வேண்டாம் என அமைச்சர்களுக்கும், திமுகவினருக்கும் அறிவுறுத்த வேண்டும்’ என்று இரு தரப்பு வழக்கறிஞர்களையும் கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரத்தில் இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறி கருத்து தெரிவிப்பது, வழக்கில் தொடர்புடையவர்கள் தப்பிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

SCROLL FOR NEXT